Mannin Magal Scheme: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க 50% மானியம், 100% பதிவுக்கட்டண விலக்கு. முக்கிய அப்டேட்
Mannin Magal Scheme: நிலமற்ற மகளிரை நில உரிமையாளராக்கும் 'மண்ணின் மகள் திட்டம்' தொடர்பான முக்கிய அப்டேட்டை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
1/5
மண்ணின் மகள் திட்டம்
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிரை நில உரிமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் 'மண்ணின் மகள் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், வாங்கப்படும் விவசாய நிலத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
2/5
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 18 முதல் 55 வயதுக்குட்பட்ட மகளிராக இருக்க வேண்டும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது ஆண் வாரிசு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.
3/5
பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது
வாங்க உத்தேசித்துள்ள விவசாய நிலத்தின் விற்பனையாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அந்த நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலமோ அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமோ வாங்கிக்கொள்ளலாம்.
4/5
பயனாளிகளுக்கு கூடுதல் சலுகை
பயனாளிகளுக்கு கூடுதல் சலுகையாக, இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் நிலத்தை பயனாளிகள் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தாட்கோ திட்டத்தின் கீழ் பயன் அடைந்திருக்கக் கூடாது.
5/5
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட ஆதிதிராவிட விவசாயிகள் https://newschemetahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.