Gen Z இளம் தலைமுறையினர் தந்தை பெரியாரை புரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினால், அவரது இந்த 5 புத்தகங்களை வாசித்தாலே போதும். அவை குறித்து இங்கு காணலாம்.
தந்தை பெரியார் எக்காலத்திற்குமானவர். பெண் விடுதலை, சமூக நீதி பார்வை, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு பார்வை உள்ளிட்டவற்றில் தந்தை பெரியார் தனித்துவமானார். அந்த வகையில் அவர் எழுதிய சிறு சிறு புத்தகங்களை அறிந்துகொள்வதும் அவசியம்.
1/5
இனிவரும் உலகம்
இயந்திரமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, எதிர்கால மனித வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பதை பல ஆண்டுகளுக்கு பெரியார் கணித்து எழுதிய அறிவியல் பூர்வமான நூல். விஞ்ஞானத்தை விரும்பும், பழமைவாதத்தை உடைக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளம் தலைமுறையினர் இதை வாசிக்கலாம், அவருக்கு இது சுவாரஸ்யமான அனுபவத்தை கொடுக்கும்.
2/5
வாழ்க்கைத் துணைநலம்
திருமணம், காதல், குடும்ப உறவுகள் மற்றும் ஆணாதிக்க நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய உங்களை யோசிக்க வைக்கும் புத்தகம். பாரம்பரிய சடங்குகளை கொண்ட திருமணங்களை விடுத்து, சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிதலை அடிப்படையாக கொண்ட சுயமரியாதை திருமணம் ஏன் இந்த காலகட்டத்தில் தேவை என்பதை நடைமுறை உதாரணங்களுடன் பெரியார் விளக்கி உள்ளார்.
3/5
பெண் ஏன் அடிமையானாள்?
இன்றைய நவீன பெண்ணியம், தனிநபர் சுதந்திரம், திருமணக் கட்டமைப்பு குறித்த விவாதங்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சலாக பேசிய புத்தகம். குடும்பம், கற்பு, குழந்தைப் பேறு, பெண்களின் பொருளாதார சுதந்திரம் குறித்து பெரியார் முன்வைக்கும் வாதங்கள் இன்றைய Gen Z தலைமுறையினருக்கு ஆச்சர்யமூட்டும் அளவுக்கு சமகாலப் பார்வையைக் கொண்டிருக்கும்.
4/5
சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன்?
தன்மானம், சமத்துவம், சுயமரியாதை என்ற விழுமியங்களை அரசியலாக மாற்றிய பின்னணியை இந்த புத்தகத்தில் பெரியார் விளக்கியிருப்பார். 'உன் விதியை நீயே முடிவு செய். யாருக்கும் அடிபணியாதே' என்ற பெரியாரின் அடிப்படை அறத்தை Gen Z தலைமுறையினர் இதில் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.
5/5
கடவுளும் மனிதனும்
எதையும் கண்மூடித்தனமாக ஏற்காமல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் தர்க்க அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என இந்த புத்தகத்தில் பெரியார் வலியுறுத்தி உள்ளார். மூடநம்பிக்கைகள், சடங்குகள், அதிகார மையங்களை லாஜிக்காக எதிர்கொள்ளும் பெரியாரின் உரையாடல் பாணி இதில் தெளிவாக இருக்கும்.