SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கரையைக் கடக்கும் அர்னாப் புயல்: புதுச்சேரியில் படகுகள் இயக்கம் ரத்து, மின்துறை அவசர எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஏனாம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஏனாம் பகுதியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மின்துறை அறிவுறுத்தியுள்ளது.

Written By Shiva Murugesan
Published: Oct 27, 2026, 11:59 AM IST | Updated: Oct 27, 2026, 12:03 PM IST
Join

புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில் அர்ணா புயலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு மற்றும் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புயல் கரையை கடக்கும் முன்னரே தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அர்ணா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு அவசரத் தயார்நிலையில்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்ணா புயல் காரணமாக ஏனாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஏனாம் பிராந்திய நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அனைத்து துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்று, புயல் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றுதல், வடிகால்களை தூர்வாரி சீரமைத்தல், குடிநீர் மற்றும் மின்சார சேவைகள் தடையின்றி செயல்படுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும் அவசரகால மீட்பு பணிகள் தேவைப்பட்டால் உடனடியாக செயல்பட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். 

பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால், அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க - தீவிரமாகும் அர்னாப் புயல்! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. புதுச்சேரி அரசு அறிவிப்பு

28 ஆம் தேதி கரையை கடக்கும் அர்ணா புயல்

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்ணா புயல் தொடர்ந்து வலிமை பெற்று மிக தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புயல் ஆந்திர மாநிலத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் கடற்கரை அருகே 28 ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 140 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அர்ணா புயல் எதிரொலி: சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக தடை

புயல் தாக்கம் அதிகரித்து கடல் சீற்றம் காணப்படுவதால், புதுச்சேரியில் சுற்றுலா படகுகள் இயக்கத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய துறைமுகம், பாண்டி மெரினா மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து தனியார் சுற்றுலா படகுகளும் மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுடன், மீனவர்களும் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் கரையோரத்தில் தங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு மற்றும் மின்சார அபாயம் குறித்து எச்சரிக்கை

கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மின்துறை அறிவுறுத்தியுள்ளது.

கீழே விழுந்த மின்கம்பிகளை தொடக்கூடாது, வெள்ளநீர் சூழ்ந்த மின்மாற்றிகள் மற்றும் மின்நிலையங்களுக்கு அருகில் செல்லக் கூடாது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - ரூ.5000 மட்டும் எடுக்க அனுமதி... புதுச்சேரி கூட்டுறவு வங்கிக்கு RBI திடீர் கட்டுப்பாடு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES