ஆவணியில் வழிபாடு செய்ய வேண்டிய... தமிழ்நாட்டின் 5 முக்கிய கோவில்கள்
Temples To Visit In Avani Month: ஆவணி மாதம் பிறக்க இருக்கிறது. ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த 5 திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நன்மை வந்து சேரும். அவற்றின் சிறப்புகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Published: Aug 10, 2026, 07:10 AM IST
| Updated: Aug 10, 2026, 05:52 PM IST
Temples To Visit In Avani Month: தமிழ்நாட்டின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பிறக்கிறது. ஆவணி மாதமும் ஆன்மீக ரீதியாகவும், வழிபாட்டு முறைகளிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆவணி மாதத்தில் சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கும். இந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆவணி ஞாயிறு, கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம் போன்ற பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாதத்தில் தரிசிக்க வேண்டிய தமிழ்நாட்டின் 5 முக்கிய கோவில்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை காணலாம்.
1. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோவில்
- திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில், இந்த ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இங்கு நடைபெறும் ஆவணி உரியடி உற்சவம் மிகவும் புகழ்பெற்றது.
- கையில் வெண்ணெய் உடன் காட்சி தரும் சந்தான ராஜகோபாலனை ஆவணி மாதத்தில் வழிபட்டு, வெண்ணெய் நைவேத்தியம் செய்து சாப்பிட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.
- இங்குள்ள ஹரித்ரா நதி குளம் ஆசியாவிலேயே மிகப்பெரிய கோவில் குளங்களில் ஒன்றாகும். இதில் நீராடி பெருமாளை தரிசிப்பது மகிழ்ச்சியை கொடுக்கும்.
2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
- ஆவணி மாதத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 12 நாட்களுக்கு ஆவணி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
- ஆவணி மாதத்தில் வரும் திருவிழாவின் போது சுவாமி சண்முகர், சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி போன்ற சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருவார். இதனை தரிசிப்பது பிறவி நோய்களை நீக்கும் என்பது ஐதீகம்.
- நாக தோஷம், செவ்வாய் தோஷம், திருமண தடைகள் உள்ளவர்கள் ஆவணி மாதத்தில் திருச்செந்தூர் கடலில் தீர்த்தமாடி செந்திலாண்டவரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
3. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருகோவில்
- சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
- ஆவணி ஞாயிறன்று அருணாசலேஸ்வரரையும், திருவண்ணாமலையையும் கிரிவலம் வந்து தரிசிப்பது, சூரிய பகவானின் அருளையும் சிவபெருமானின் அருளை ஒரே நேரத்தில் பெறலாம்.
- ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய நாள் ஆகும். சிவனின் அக்னி வடிவை ஆவணி ஞாயிறுகளில் வழிபடுவதால் நீண்டகால உடல் உபாதைகள், கண் கோளாறுகள் மற்றும் தோல் நோய்கள் நீங்கும்.
- சித்தர்கள் வாழும் மலையாக கருதப்படும் அண்ணாமலையை ஆவணி மாதத்தில் வலம் வருவது ஜென்ம பாவங்களைப் போக்கும்.
4. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்
- ஆவணி மாதத்தின் மிகப்பெரிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, பிள்ளையார்பட்டியில் 10 நாட்கள் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
- ஆவணி சதுர்த்தியன்று மூலவர் கற்பக விநாயகருக்கு நடைபெறும் முக்கோடி சந்தன காப்பு அலங்கார தரிசனம் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புத காட்சியாகும்.
- வடகிழக்கு நோக்கி அமைந்திருக்கும் 6 அடி உயர விநாயகரை ஆவணி மாதத்தில் வழிபடுவது புதிய தொழில், கல்வி, வியாபாரத் தொடக்கங்களுக்கு பெரும் வெற்றியைத் தரும்.
- வலம்புரி விநாயகரான இவர், தன்னை நாடி வரும் பகதர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் கற்பக விருட்சமாக விளங்குகிறார்.
5. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
- முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதம் ஆவணி மூலத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.
- மதுரையில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடல்களில் முக்கியமான 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' ஆவணி மூல நாளில் நடைபெறும். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மதுரைக்கு எழுந்தருளி சுந்தேரஸ்வரருடன் இணைந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
- தேவயானையை முருகன் கரம்பிடித்த தலம் என்பதால், ஆவணி மாதத்தில் இங்கு வந்து வழிபடும் திருமண வயதினருக்கு விரைவில் நல்ல வரன் அமையும்.
- மலையைக் கடந்து அமைக்கப்பட்ட இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், துர்க்கை ஆகிய 5 தெய்வங்களும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கின்றனர்.