திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க சூப்பர் வாய்ப்பு.. எப்படி தெரியுமா?
Tirupati Darshan: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பலரும் ரூ.300 கட்டணம் செலுத்துவார்கள். ஆனால், இலவசமாக எப்படி ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Tirupati Darshan: ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உள்ளது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விசேஷ தினங்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்களுக்காக ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என பல சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. அதே நேரத்தில், இலவச தரிசன சேவையையும் திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை இலவசமாக எப்படி தரிசனம் செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
சர்வ தரிசன டிக்கெட் எங்கெல்லாம் பெறலாம்?
திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனம் மூலம் இலவசமாக பார்க்கலாம். இதற்காக நீங்கள் ஆன்லைனில் எந்த ஒரு டிக்கெட்டையும் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. திருப்பதிக்கு நேரடியாக சென்று, இலவசமாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு தரிசனம் செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய SSD டோக்கன் பக்தர்கள் வழங்கப்படும். இந்த சர்வ தரிசன டோக்கன் ஆன்லைனில் பெற முடியாது. திருப்பதியில் உள்ள TTD கவுண்டர்களில் நேரில் சென்று மட்டுமே இந்த டோக்கனை பெற வேண்டும்.
இலவச தரிசன டோக்கன் பெற ஆதார் அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். திருப்பதியில் உள்ள குறிப்பிட்ட கவுண்டர்களில் மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும். அதன்படி, விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் கம்ப்ளக்ஸ் ஆகிய கவுண்டர்களில் மட்டுமே சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படும்.
| வ.எண் | கவுண்டர்கள் விவரம் | இடத்தின் விவரம் |
| 1. | விஷ்ணு நிவாசம் | திருப்பதி ரயில் நிலையத்திற்கு நேர் எதிரே திருப்பதி தேவஸ்தானத்தின் கவுண்டர் உள்ளது. |
| 2. | பூதேவி காம்ப்ளக்ஸ் | திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் அலிபிரி நடைபாதை நுழைவாயில் மற்றும் அலிபிரி பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கும் சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படும். |
| 3. | ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் | ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் திருப்பதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ளது. இங்கும் சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படும். |
SSD டோக்கன் பெறுவது எப்படி?
மேற்கண்ட மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு மதியம் 12 முதல் 1 மணிக்குள் அங்கு சென்றடைய வேண்டும். இதன் பிறகு, உங்களை உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். தொடர்ந்து, அங்கு 3 முதல் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சர்வ தரிசன டோக்கனை பெறலாம். அப்போது, உங்கள் ஆதார் கார்ட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
சர்வ தரிசன டோக்கனில், தரிசன நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். சர்வ தரிசன டோக்கன் பெற்ற, மறுநாள் தான் உங்களால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். எனவே, டோக்கனை பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.