SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

காலத்தால் அழியாத சாதனைகள்: கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாத 7 ரெக்கார்டுகள்!

அதிரடி பேட்டர்கள் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர்கள் தற்போது பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் முறியடிக்க முடியாத சில இமாலய சாதனைகள் உள்ளன. அதில் ஒரு 7 சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 09, 2026, 09:49 IST | Updated: Aug 09, 2026, 09:55 IST
Image Credit: Image Source: X
Join

இன்றைய நவீன கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில சாதனைகள் மட்டும் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் நிற்கின்றன. நவீன கிரிக்கெட்டின் வேகமும் மாற்றங்களும் எவ்வளவு தூரம் வந்தாலும், காலத்தால் அழியாத சாதனைகள் இன்னும் இருக்கின்றன. இனி அதனை முறியடிக்க வாய்ப்பும் இல்லை. அப்படி 7 வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள் இங்கே.

1. டான் பிராட்மேனின் டெஸ்ட் பேட்டிங் சராசரி - 99.94

கிரிக்கெட்டின் முன்னோடியாக திகழும் சர் டான் பிராட்மேன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் நம்ப முடியாத சராசரியை வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு தொடர்ச்சியாக விளையாடினாலும் 60 சராசரியை கடக்கவே கஷ்டப்படும் நிலையில், டான் பிராட்மேன் அப்போதே 99.94 சராசரியுடன் நிறைவு செய்துள்ளார்.

ஏன் முறியடிக்க முடியாது?

இன்றைய கிரிக்கெட் போட்டிகள் உலகின் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று ஃபார்மெட் இருப்பதால், ஒரு பேட்ஸ்மேன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது சாத்தியமற்றது.

2. சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள்

"கிரிக்கெட்டின் கடவுள்" என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச போட்டிகளில் மொத்தம் 100 சதங்கள் அடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 85 சதங்களுடன் இருந்தாலும், சச்சினின் இந்த சாதனையை முறியடிப்பது கடினமே.

ஏன் முறியடிக்க முடியாது?

வீரர்கள் இடையே இருக்கும் போட்டி, இதனால் ஏற்படும் மன அழுத்தம், டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் மற்றும் உடல் தகுதியை தக்கவைத்துக்கொள்வதில் இருக்கும் சவல்கள் காரணமாக, நீண்ட காலம் விளையாடி 100 சதங்கள் அடிப்பது என்பது சாத்தியமே இல்லை.

3. முத்தைய முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட்கள்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் முரளி தரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்னே 708 விக்கெட்களுடன் உள்ளார். தற்போது விளையாடி வரும் எந்தவொரு பந்து வீச்சாளரும் இந்த எண்ணிக்கைக்கு அருகில் கூட இல்லை. \

ஏன் முறியடிக்க முடியாது?

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் என்பது குறைந்து வருகிறது. வீரர்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் போன்ற குறுகிய வடிவ போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக முரளி தரனின் 800 விக்கெட் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது.

4. ஒரு டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்கள்

1956-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் 90 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த சாதனை தற்போது வரையில் எவராலும் முறியடிக்க முடியவில்லை.

ஏன் முறியடிக்க முடியாது?

நவீன ஆடுகளங்களின் தன்மை, DRS தொழில் நுட்பம் ஆகியவற்றை கடந்து, ஒரே பந்துவீச்சாளர் ஒரு போட்டியின் 20 விக்கெட்டுகளையும் தனியாக சரிப்பது மீண்டும் நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்று.

5. கிறிஸ் கெய்லின் 175 ரன்கள்

2013 IPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், புனே அணிக்கு எதிராக வெறும் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசி அசத்தினார். இதுவே T20 போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச தனிநபர் ரன்னாகும்.

ஏன் முறியடிக்க முடியாது?

இன்றைய டி20 கிரிக்கெட்டில் 250 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அணி களமிறங்குகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக ஒரு பேட்ஸ்மேன் தொடக்கம் முதலே திட்டமிட்டு அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதன் காரணமாகவே ஒருவரால், 175 ரன்களுக்கு மேல் அடிப்பது மிகவும் கடினம்.

6. ஒரே டெஸ்ட்டில் அதிக ரன்கள் - கிரஹாம் கூச் (456 ரன்கள்)

1990-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் கிரஹாம் கூச் ஒரே போட்டியில் 456 ரன்கள் (முதல் இன்னிங்ஸில் 333, இரண்டாவது இன்னிங்ஸில் 123) குவித்தார்.

ஏன் முறியடிக்க முடியாது?

தற்போதைய டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் வெற்றி-தோல்வியை நோக்கியே திட்டமிடப்படுவதால், அணிகள் விரைவாகவே இன்னிங்ஸை டிக்ளேர் செய்துவிடுகின்றன. இதனால் ஒரு வீரருக்கு இவ்வளவு ரன்கள் குவிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

7. தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகள் - அலஸ்டேர் குக் (159 போட்டிகள்)

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டேர் குக், 2006 முதல் 2018 வரை காயம் காரணமாகவோ அல்லது ஃபார்ம் காரணமாகவோ ஒரு போட்டியில் கூட விலகாமல், தொடர்ச்சியாக 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

ஏன் முறியடிக்க முடியாது?

இன்றைய பணிச்சுமை, அடிக்கடி ஏற்படும் காயங்கள் மற்றும் ஓய்வு அளிக்கும் சுழற்சி முறை ஆகியவற்றால், எந்தவொரு வீரராலும் தொடர்ச்சியாக 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES