மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கை... ஸ்டார் வீராங்கனை எதிர்ப்பு - அனன்யா பங்கர் பதிலடி
இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை கிரிக்கெட் வீரரான அனன்யா பங்கர் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அனன்யா பங்கர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
Ananya Banger vs Marizanne Kapp: இந்திய அணி மூத்த வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகள் அனன்யா பங்கர். திருநங்கையான இவர் கிரிக்கெட் வீரரும் ஆவார்.
நீண்டகால போராட்டத்திற்கு பின்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர் மகளிர் கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது அவரை போன்று கிரிக்கெட் விளையாட நினைக்கும் திருநங்கையர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் அனன்யா பங்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது உயர்மட்ட கிரிக்கெட் தொடர்களில் திருநங்கைகள் மற்றும் பாலின மாற்று வீரர்களை உள்ளடக்குவதற்கான கொள்கையை வகுத்துள்ளது. இதன்கீழ், ஆஸ்திரேலியா முழுவதும் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் மற்றும் பெண்கள் பிரீமியர் தொடர்களில் விளையாடுவதற்கான ஒப்புதலை அனன்யா பெற்றுள்ளார். இதனால், மகளிர் BBL போன்ற தொடர்களில் அனன்யா அடுத்த 2027 மார்ச் முதல் விளையாடலாம்.
2027 மார்ச் முதல்...
மும்பையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அனன்யா பேசியதாவது,"எனது வாழ்வில் முக்கிய அங்கமாக கிரிக்கெட் உள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட திரும்புவதற்கான ஒரு வழியை பற்றி இப்போது என்னால் பேச முடிகிறது. 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர்மட்ட கிரிக்கெட்டில் பங்கேற்கும் நோக்குடன், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் தொடரில் விளையாட நான் தயாராகி வருகிறேன்" என்றார்.
டெஸ்டோஸ்டிரோன் அளவில் கட்டுப்பாடு
இருப்பினும் அவர் தனது ரத்தத்தின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் தொடர்பான கடுமையான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு வரம்புகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம்தான், தாய்லாந்தில் தனது பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அனன்யா பாங்கர் தொடர்ச்சியாக அவரது வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
முன்னதாக, மும்பை இளம் அணியில் பயிற்சி பெற்று விளையாடி வந்த இவர், சர்பராஸ் கானுடன் விளையாடியவர். 2022ஆம் ஆண்டில் தான் திருநங்கை என அடையாளம் கண்டு உலகிற்கு அறிவித்தார். அதற்கு முன்னர் அவர் ஆர்யன் பங்கர் என அறியப்பட்டார்.
மாரிசான் கேப் எதிர்ப்பு
இந்நிலையில் அனன்யா பங்கரை மகளிர் கிரிக்கெட்டில் விளையாட வைக்கும் அறிவிப்பு வெளியானதை சுட்டிக்காட்டி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை மாரிசான் கேப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர், "இது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. இதை அனுமதிக்கவே கூடாது" என பதிவிட்டுள்ளார்.
அனன்யா பங்கர் பதிலடி
இதற்கு அனன்யா பங்கர் பதிலடியும் கொடுத்துள்ளார். PTI செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இதற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள், இதுகுறஇத்த உண்மைகளை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். எந்த விதமான நியாயமற்ற அனுகூலமும் இல்லாதது மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வகுத்திருக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது ஆகியவை தொடர்பான போதுமான தகவல்களை நான் ஏற்கெனவே வழங்கி உள்ளேன்.
முதலில் போய் படிங்க...
அவர்களின் தனிப்பட்ட கருத்து அப்படிப்பட்டதாக இருந்தால் அவர்களே முயற்சித்து இதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
எவ்வித அனுகூலமும் கிடையாது...
முன்னதாக மும்பை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "பெண்கள் கிரிக்கெட்டில் நியாயத்தன்மை, போட்டி ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு கட்டமைப்பு உள்ளது. அந்த கட்டமைப்பின் அடிப்படையிலேயே எனது விவகாரம் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்துள்ளது" என அனன்யா பங்கர் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
கிளப் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தன்னால் அடுத்து மகளிர் BBL தொடரில் பங்கேற்க முடியும் என்றும்; எனவே இங்கிருந்து அனைத்தும் குழந்தையின் முதல் அடியை போலவே தனக்கு இருக்கும் என்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார்.