CSG vs VKK: டிஎன்பிஎல் ரன்அவுட் சர்ச்சை; டென்ஷன் ஆன ஷாருக்கான் - நடந்தது என்ன?
டிஎன்பிஎல் 2026 தொடரில் கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கின் போது, சச்சின் ரன்அவுட்டாகி வெளியேறினார். இதனால், கோவை கேப்டன் ஷாருக்கான் கடும் கோபமடைந்தார்.
டிஎன்பிஎல் 2026 தொடரில் கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கின் போது, சச்சின் ரன்அவுட்டாகி வெளியேறினார். இதனால், கோவை கேப்டன் ஷாருக்கான் கடும் கோபமடைந்தார். இச்சம்பவம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் 20 லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள் சென்னையில் நடைபெற இருக்கின்றன.
மீதம் மொத்தம் 8 லீக் போட்டிகளும், 4 பிளே ஆப் போட்டிகளும் உள்ளன. நேற்று முதல் சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் தொடங்கி உள்ளன. சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் நேற்று மோதின.
தொடக்கத்தில் தடுமாறிய சென்னை
இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கோவை அணி கேப்டன் ஷாருக்கான். அதன்படி, சென்னை அணி பேட்டிங்கிற்கு வந்து பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டை இழந்தது.
ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்வப்னில் சிங் - ராம் அரவிந்த் சிறப்பாக ரன்களை சேர்த்தது. ஸ்வப்னில் சிங் பொறுமை காக்க இம்பாக்ட் வீரராக வந்த ராம் அரவிந்த் பெரிய தாக்கத்தை செலுத்தினார். அவர் 32 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 63 ரன்களை குவித்து மணிமாறன் சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் சொதப்பிய சென்னை
ராம் அரவிந்த் ஆட்டமிழந்த உடன் மீண்டும் சரிவை சந்தித்தது சென்னை அணி. தினேஷ் ராஜ் மடடும் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 32 ரன்களை அடித்து கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்தார். இதனால், 10 ஓவர்களில் 100/3 என்றிருந்த சென்னை அணி 19.3 ஓவர்கள் முடிவில் 167 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
கோவை பந்துவீச்சில் ஆர்எஸ் அம்பிரிஷ் 3 , மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டை வீழ்த்தினர். திவாஹர், ஜி கிஷோர், ஜாத்வேத் சுப்பிரமணியன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
கோவை சிறப்பான தொடக்கம்
168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேவில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே சரிந்தது. ராதாகிருஷ்ணன் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களை அடித்தனர்.
ஆனால், 2வது விக்கெட்டுக்கு சுரேஷ் லோகேஷ்வர் - பி. சச்சின் சிறப்பாக விளையாடினர். அதில் 11.6 பந்தில் சிலம்பரசன் வீசிய த்ரோவில் ரன் அவுட்டாகி, லோகேஷ்வர் அதிருப்தி உடன் வெளியேறினார்.
சர்ச்சையான ரன் அவுட்
லோகேஷ்வர் - சச்சின் ஜோடி 2வது ரன்னுக்கு ஓடும்போது, இருவருமே திடீரென சற்று தயக்கம் கட்டியதால் ரன்அவுட் ஏற்பட்டது. இருவருமே நடு ஆடுகளத்தில்தான் அப்போது இருந்தனர். அப்படியிருக்க, லோகேஷ்வர் பாதி ஆடுகளத்தை தாண்டவே இல்லை, ரன்அவுட்டான போது சச்சின்தான் ஸ்ட்ரைக் எண்ட் பக்கம் இருந்தார் என சென்னை கேப்டன் ஜெகதீசன் நடுவர்களிடம் முறையிட்டார்.
அவர் முறையிடும்போது புதிய வீரராக மான் கே ஃபாப்னா ஆடுகளத்திற்கு வந்துவிட்டார், அடுத்த ஓவரை வீச பந்துவீச்சாளரும் ரெடியாகிவிட்டார். அவுட் என வெளியேறிய லோகேஷ்வர் டிரஸ்ஸிங் ரூமும் சென்றுவிட்டார்.
கோபத்தில் ஷாருக்கான்
அதன்பின்னரே, 3வது நடுவர் ஆய்வு செய்து சச்சின்தான் அவுட் என உறுதிசெய்தனர். இதனால், பெவிலியன் உள்ளே சென்ற லோகேஷ்வர் மீண்டும் தயாராகி ஆடுகளத்திற்குள் வந்தார். சச்சின் கடும் அதிருப்தி உடன் வெளியேறினார்.
பரபரப்புக்கு பஞ்சமில்லை
Watch LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.
ook your tickets now on the District by Zomato app.— TNPL (@TNPremierLeague)
பெவிலியனிலும் கேப்டன் ஷாருக்கான், சுழற்பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் போட்டி நடுவரிடம் ஆவேசமாக முறையிட்டனர். இருப்பினும், சச்சின் ஆட்டமிழந்தார் என அறிவிக்கப்ட்டது.
இதுகுறித்து போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை பந்துவீச்சாளர் திவாகர், "அவர் (லோகேஷ்வர்) அவுட்டாகிவிட்டார் என்பதால் பேட் என அனைத்தையும் கழட்டிவிட்டார். முந்தைய போட்டிகளில் எங்களுக்கு ஒரே ரன்அவுட்டே கொடுக்கவில்லை, ஆனால் இதை மட்டும் பார்த்து சொல்கிறார்கள்" என்றார்.
கோவை வெற்றி
இருப்பினும், சச்சின் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் என 37 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாஃப்னா 7 ரன்களுக்கும், லோகேஷ்வர் 40(39) ரன்களுக்கும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பை அடைந்தது.
லோகேஷ்வர் ஆட்டமிழந்தபோது, 32 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரேம் குமார் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஷாருக்கான். இதனால் அந்த ஓவரிலேயே 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 18.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து VIDA கோவை கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
புள்ளிப்பட்டியல் நிலவரம்
3 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை உண்டாக்கிய ஆர்.எஸ்.அம்பிரிஷ் ஆட்டநாயகனாக தேர்வானார். கோவை கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் நம்பர் 2 இடத்திற்கு சென்றது.
மதுரை அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கோவை, சென்னை, திருப்பூர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 2வது முதல் 6வது இடத்தில் உள்ளன.
சூடுபிடிக்கும் டிஎன்பிஎல்
திண்டுக்கல் 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சேலம் இதுவரை ஒரு புள்ளியை கூட பெறாமல் கடைசி இடத்தில் தவிக்கிறது. இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
இன்றைய போட்டியில் திண்டுக்கல் வென்றால், எந்த அணி பிளே ஆப் போகும் என்ற சுவாரஸ்யம் கடைசி போட்டி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். சென்னை சேப்பாக்கத்தில் போட்டி காண ஆன்லைன் மற்றும் நேரில் கவுண்டரிலும் டிக்கெட்டை வாங்கலாம். ரூ.100 முதல் டிக்கெட் விற்பனைக்கு உள்ளது.