ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சாய் கிஷோரை அணிக்கு கொண்டுவர சிஎஸ்கே ஆர்வம் காட்டும் நிலையில், அவருக்கு பதிலாக டெவால்ட் பிரேவிஸை குஜராத் அணி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான டிரேடிங் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஒரு தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரின் தேவை உள்ளது. இதற்கான வீரர்களை மற்ற அணிகளில் தேடி வரும் சிஎஸ்கே நிர்வாகத்தின் கவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள சாய் கிஷோர் மீது திரும்பியுள்ளது.
குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், சாய் கிஷோர், மனவ் சுதார், ராகுல் தேவத்தியா என பல சுழற்பந்து வீச்சு திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர். இதனால் திறமையான வீரராக இருந்தாலும் சாய் கிஷோருக்கு தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.
இதனை பயன்படுத்தி அவரை டிரேடிங் முறையில் வாங்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது. ஆரம்பத்தில் சாய் கிஷோருக்கு மாற்றாக சர்பராஸ் கானை வழங்க சென்னை அணி முன்வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்த பரிமாற்றத்தில் குஜராத் நிர்வாகத்துக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து உர்வில் படேலை கொடுத்து சாய் கிஷோரை பெறுவதற்கான முயற்சியில் சிஎஸ்கே இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சாய் கிஷோருடன் சேர்த்து நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸையும் வழங்க குஜராத் டைட்டன்ஸ் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு பதிலாக உர்வில் படேலுடன் டெவால்ட் பிரேவிஸையும் கொடுக்க வேண்டும் என அந்த அணி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஐபிஎல் 2026 சீசனில் கிளென் பிலிப்ஸ் 6 போட்டிகளில் விளையாடி, 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்தார். இதில் 16.75 சராசரி மற்றும் 124.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 67 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், குஜராத் அணியில் ஜோஸ் பட்லர், ரஷித் கான், காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் என வெளிநாட்டு வீரர்களுக்கான போட்டி அதிகமாக இருப்பதால் பிலிப்ஸுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
இதனால், பிரேவிஸை அணிக்கு கொண்டுவந்து மிடில் ஆர்டரை வலுப்படுத்த குஜராத் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜேசன் ஹோல்டருக்கு மாற்றாக பிரேவிஸை பயன்படுத்தும் நோக்கத்திலும் இந்த பரிமாற்றத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது.
ஆனால், டெவால்ட் பிரேவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் விட்டுக்கொடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தொடர்பான டிரேடிங் பேச்சுவார்த்தையின்போது பிரேவிஸை கேட்டதாகவும், அதற்கு சிஎஸ்கே சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான அக்சர் படேல் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பிரேவிஸை மாற்றாக வழங்க சிஎஸ்கே மறுத்ததாக கூறப்பட்டது. இதனால், இப்போதும் அவரை குஜராத் அணிக்கு வழங்க சென்னை நிர்வாகம் விரும்பாது என தெரிகிறது.
மறுபுறம், உர்வில் படேலையும் சிஎஸ்கே வேறு வழியின்று டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. அணியின் முக்கிய தேவையாக இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருப்பதால், சாய் கிஷோரை பெறுவதற்கான மாற்று வழிகளையும் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை டிரேடிங் மூலம் விரும்பிய வீரரை பெற முடியாவிட்டால், ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் தற்காலிகமாக ஒரு ஆல்ரவுண்டரை வாங்கிவிட்டு, 2028 சீசனுக்கான மெகா ஏலத்தில் தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேர்வு செய்யும் திட்டத்திலும் சிஎஸ்கே இருப்பதாக கூறப்படுகிறது.