சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!
ஐபிஎல் 2027 தொடருக்கு முன் மிடில் ஆர்டரை வலுப்படுத்தத் திட்டமிடும் சிஎஸ்கே, இளம் பேட்டர் உதய் சகரனை ட்ரயலுக்கு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஐபிஎல் சீசனில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அணியின் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில், பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்பாக சில வீரர்களை விடுவித்து, திறமையான இளம் வீரர்களை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2028 சீசனுக்கு முன்பாக நடைபெறக்கூடிய மெகா ஏலத்தையும் கருத்தில் கொண்டு அணியை மறுசீரமைக்கும் திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிஎஸ்கே கவனத்தை ஈர்த்த உதய் சகரன் மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்க்கும் முயற்சியில், இளம் பேட்டர் உதய் சகரனை சிஎஸ்கே அணி ட்ரயலுக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. சர்பராஸ் கானை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெர்விக்கின்றன. எனினும், வீரர்களை விடுவிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
22 வயதான உதய் சகரன், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். அந்த அணிக்காக 14 போட்டிகளில் களமிறங்கி 49.50 சராசரியில் 594 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.
டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டம்
இளம் வீரரான உதய் சகரன், பஞ்சாப் டி20 தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறமையால் கவனம் பெற்றுள்ளார். 6 போட்டிகளில் 195க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 351 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். ஒரு போட்டியில் 43 பந்துகளில் 86 ரன்கள் எடுத்ததும் அவரது அதிரடி ஆட்டத்திற்கு சான்றாக அமைந்தது.
வலது கை பேட்டரான உதய் சகரன், பகுதி நேர ஆஃப் ஸ்பின்னராகவும் செயல்ப்படக்கூடியவர். மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ரன்கள் சேர்ப்பதுடன், தேவையான நேரத்தில் அதிரடியாக விளையாடும் திறன் அவருக்கு இருப்பதாக கருதப்படுகிறது.
மிடில் ஆர்டரை வலுப்படுத்துமா சிஎஸ்கே?
சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், டெவால்ட் பிரேவிஸ் போன்ற வீரர்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அணி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது. கார்த்திக் சர்மாவிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய தாக்கம் கிடைக்கவில்லை என்ற மதிப்பீடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், உதய் சகரனை அணியில் இணைப்பதன் மூலம் மிடில் ஆர்டருக்கு இளமை திறனையும் கூடுதல் ரன் வேகத்தையும் கொண்டுவர சிஎஸ்கே திட்டமிட்டிருக்கலாம். அதேசமயம் ஏலத்தில் மற்ற அணிகளும் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கூடுதல் பொறுப்பு?
சென்னை ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உதவக்கூடியவை என்பதால், பவர் பிளே ஓவர்களில் நல்ல தொடக்கம் பெறுவது அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடக்க வீரர்கள் விரைவாக ரன்கள் சேர்க்கத் தவறினால், மிடில் ஆர்டர் மீது அழுத்தம் அதிகரிக்கலாம்.
எனவே, தொடக்க ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதுடன், நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உள்ளது. கடந்த சீசனில் அவர் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதாகக் குறிப்பிடப்படும் நிலையில், அடுத்த தொடரில் அவரது பேட்டிங் வேகம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இளம் வீரர்களை அணியில் சேர்ப்பது, மிடில் ஆர்டரை வலுப்படுத்துவது, பவர் பிளேவில் ரன்களைக் குவிப்பது என பல அம்சங்களில் சிஎஸ்கே கவனம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும், வீரர்கள் விடுவிப்பு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் குறித்த இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே உறுதியாகும்.