ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. பயிற்சியாளர் சூழலில் மாஅற்றங்களை செய்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் அடுத்த சீசனுக்கான அணியை வலுப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்வது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத நிலையில், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை அணிக்கு கொண்டு வர சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக உர்வில் படேல் அல்லது ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை கொடுக்கவும் சென்னை அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து வெளியேறிய பிறகு, சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய ஆல்ரவுண்டர் இடம் சிஎஸ்கே அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சீசனில் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. பிரசாந்த் வீர் அந்த பொறுப்பை எதிர்பார்த்த அளவுக்கு சரியாக செய்யவில்லை.
இதனால், அடுத்த சீசனுக்கு முன்பாகவே இந்த குறையை சரிசெய்ய சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் மட்டுமின்றி ரஷித் கான், மனவ் சுதார், ராகுல் தேவத்தியா உள்ளிட்ட வீரர்களும் இருப்பதால், அங்கிருந்து தங்களுக்கு தேவையான வீரரை பெற முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேடலுடன், அதிரடியாக விளையாடக்கூடிய பினிஷரையும் அணியில் சேர்க்க சிஎஸ்கே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷாருக்கானை வாங்கவும் சென்னை அணி ஆர்வம் காட்டி வருகிறதாம்.
ஐபிஎல் 2026 சீசனில் ஷாருக்கானின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் பெரிய அளவில் இல்லை. அவர் விளையாடிய 8 போட்டிகளில் 10.75 சராசரி மற்றும் 130.30 ஸ்ட்ரைக் ரேட்டில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனால், அடுத்த சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக அவரை குஜராத் அணி விடுவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை என்றாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஷாருக்கானின் செயல்பாடு சிஎஸ்கே நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 327.78 ஆக இருந்தது. இதேபோல், மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் அவரது அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை சிஎஸ்கேவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதுவதாக தெரிகிறது.
ஷாருக்கானை அணியில் சேர்க்கும் முயற்சி வெற்றி பெற்றால், அவருக்கு பதிலாக பிரசாந்த் வீர் அல்லது சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவரை குஜராத் அணிக்கு வழங்க சிஎஸ்கே தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால், வீரர் பரிமாற்றத்துக்கு பதிலாக நேரடியாக பணம் கொடுத்தும் ஷாருக்கானை வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர், ஷாருக்கான் என மூன்று வீரர்களை குறிவைத்து சிஎஸ்கே காய் நகர்ந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த டிரேடிங் பேச்சுவார்த்தைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.