SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK லிஸ்ட்டில் இருக்கும் 2 ஆல்-ரவுண்டர்கள்.. தோனியின் திட்டம் பலிக்குமா?

Chennai Super Kings Latest Update: ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு இரண்டு ஆல்-ரவுண்டர்களை பரீசிலனையில் சிஎஸ்கே வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written By R Balaji
Published: Aug 26, 2026, 15:22 IST | Updated: Aug 26, 2026, 15:27 IST
Join

ஐபிஎல் 2027 சீசனுக்காக அணியை வலுப்படுத்தும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, கடந்த சீசனில் ஏற்பட்ட மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு தரமான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.

2026 சீசனுக்கு முன்பாக நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பிய சிஎஸ்கே, அவருக்கு பதிலாக ஒரு தரமான ஸ்பின் ஆல்ரவுண்டரை அணியில் சேர்க்கவில்லை. ஏலத்தின் இறுதிக்கட்டத்தில் பிரசாந்த் வீருக்கு ரூ.14.20 கோடி செலவு செய்து அவரை வாங்கியது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிரசாந்த் வீருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 6 போட்டிகளில் 5ல் பேட்டிங் செய்த அவர், 45 என்ற சராசரியில் 134.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 90 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 2 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

இதனால், ஜடேஜா அணியில் இருந்து வெளியேறிய பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை சிஎஸ்கேவால் சரியாக நிரப்ப முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதுவே 2026 சீசனில் சொதப்பியதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தருக்கு சிஎஸ்கே குறி

இந்த நிலையில், அடுத்த சீசனில் அந்த தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் மூலம் வாங்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக, சிஎஸ்கே அணியில் இருக்கும் உர்வில் படேலை வழங்கவும் சென்னை அணி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த பரிமாற்றம் தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது.

குஜராத் அணியில் ஏற்கனவே ரஷித் கான், சாய் கிஷோர், மனவ் சுதார் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், வாஷிங்டன் சுந்தரை விடுவிக்க அந்த அணி தயாராகுமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

அக்சர் படேலை வாங்கவும் திட்டம்

வாஷிங்டன் சுந்தரை பெற முடியாத சூழல் ஏற்பட்டால், அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் பேசி அக்சர் படேலை வாங்க சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அணியுடனான பேச்சுவார்த்தையில், ராகுல் சஹார் மற்றும் உர்வில் படேல் ஆகியோரை மாற்று வீரர்களாக வழங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அக்சர் படேலை அணிக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது.

அதன்படி, தற்போது சிஎஸ்கே முன் இரண்டு முக்கிய டிரேட் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று வாஷிங்டன் சுந்தர், மற்றொன்று அக்சர் படேல். இந்த இருவரில் ஒருவரையாவது டிரேட் மூலம் அணிக்குள் கொண்டு வர முடியுமா என்பதே சிஎஸ்கேவின் முக்கிய கவலையாக உள்ளது.

ஏலத்திலும் சிக்கல் வருமா?

டிரேடிங் மூலம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை பெற முடியாத பட்சத்தில், ஐபிஎல் 2027 மெகா ஏலம் அல்லது வீரர்கள் ஏலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த சிஎஸ்கே முடிவு செய்யலாம். ஆனால், ஏலத்தில் அணியின் தேவைக்கு ஏற்ற தரமான ஸ்பின் ஆல்ரவுண்டர் கிடைப்பது சந்தேசகமே.

அதனால், டிரேடிங் மற்றும் ஏலம் என இரண்டு வாய்ப்புகளிலும் சிஎஸ்கேவுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால், மீண்டும் ஜடேஜா விட்டு சென்ற இடத்தை சரியான வீரர் இல்லாமல் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தோனியின் பேச்சை கேட்காத சிஎஸ்கே

இதற்கிடையில், கடந்த வீரர்கள் பரிமாற்ற முடிவுகளும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை அணியில் இருந்து வெளியேற்றி சஞ்சு சாம்சனை வாங்கும் முடிவு குறித்து தோனி எச்சரிக்கை தெரிவித்ததாகவும், அந்த முடிவை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும், அந்த டிரேட் இறுதியில் நடைபெற்றது. சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்த பிறகும், அவரை கேப்டனாக பயன்படுத்தாதது உள்ளிட்ட முடிவுகள் சிஎஸ்கேவின் அணித் திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின. மேலும், டாப் ஆர்டருக்கான மாற்று வீரராக உர்வில் படேல் ஏற்கனவே அணியில் இருப்பதால், மேற்கொள்ளப்பட்ட சில டிரேட்கள் உண்மையில் அணியின் தேவையை பூர்த்தி செய்ததா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

இதனால், கடந்த சீசனில் ஏற்பட்ட குறைகளை சரிசெய்து, 2027 சீசனுக்கு முன்பாக ஒரு முழுமையான ஸ்பின் ஆல்ரவுண்டரை அணியில் சேர்ப்பதே சிஎஸ்கேவின் முக்கிய இலக்காக இருப்பதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் என யாரை அணிக்குள் கொண்டு வர முடியும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES