SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK Head Coach பதவி.. “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”.. முன்னாள் வீரர் அதிரடி கோரிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேடி வரும் நிலையில், எனக்குதான் நீங்கள் அந்த பதவியை தர வேண்டும் என முன்னாள் வீரர் ஒருவர் அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Written By R Balaji
Published: Sep 04, 2026, 10:43 IST | Updated: Sep 04, 2026, 10:47 IST
Join

ஐபிஎல் அணிகளில் டாப் அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் ஸ்டீபன் பிளேமிங். அவரது வழிகாட்டுதலில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையாக தடுமாறு வருகிறது. கடைசியாக 2023ல் கோப்பையை வென்ற நிலையில், 2024, 2025, 2026 என மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றை கூட எட்டமுடியாமல் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஐபிஎல்லுக்கு முன்பாக அணிக்கு சஞ்சு சாம்சனை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே அணியின் ஓர் முகமாக விளங்கி வந்த ரவீந்திர ஜடேஜாவை டிரேட் மூலம் அனுப்பினர். அவருக்கு பதிலாக ஒரு தரமான வீரரை அந்த இடத்திற்கு எடுக்கலாம் என நினைத்த நிலையில், அது முடியாமல் போனது. இது பயிற்சியாளர் ஸ்டீபன் பிளேமிங் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தோனியால்தான் பிளேமிங் வெற்றியை குவித்து வந்தார். அவர் அணியுடன் இல்லாத நேரத்தில் பிளேமிங் அணியை வழிநடத்துவதில் சொதப்பியே உள்ளார் போன்ற கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த சூழலில், 2027 ஐபிஎல் தொடரில் எப்படியாவது ஒரு தரமான கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட தொடங்கி இருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முதல்படியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து பிளேமிங்கை நீக்கியது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தலைமை பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகிறது.

முதலில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த ராகுல் டிராவிட்டிடம் பேசியது. ஆனால் அவர் “நான் பயிற்சியாளராக வர தயார். ஆனால் எனது முடிவில் தோனியின் தலையீடு இருக்ககூடாது என டிராவிட் கண்டீஷன் போட்டதாக கூறப்பட்டது. இது சிஎஸ்கே அணிக்கு செட்டாகவில்லை என்று அவரிடம் பேச்சுவார்த்தையை அப்படியே கைவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து மகேந்திர சிங் தோனியிடமே சிஎஸ்கே நிர்வாகம் பேசியது. ஆனால் தோனி என்னால் பயிற்சியாளராக செயல்பட முடியாது என மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட சில வெளிநாட்டு பயிற்சியாளர்களை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அவர்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான், முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தன்னை பயிற்சியாளராக நியமிக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, சிஎஸ்கே அணியை என்னால் ஆக்ரோஷமாக பழைய நிலைமைக்கு மாற்ற முடியும். அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எனது வேலை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என ரெய்னா தெரிவித்துள்ளாராம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சுரேஷ் ரெய்னாவுக்கு இருக்கும் உறவு குறித்து அனைவருக்கும் தெரியும். சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ரெய்னா, அந்த அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் ஒருவர்.

2008 முதல் 2015ஆம் ஆண்டு வரையும், பின்னர் 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரையும் சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக இருந்த ரெய்னா, மொத்தம் 176 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 171 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர், 32.32 என்ற சராசரியிலும், 136.88 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 4,687 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 33 அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி, 171 சிக்ஸர்கள் மற்றும் 425 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ரெய்னா சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 7.39 என்ற எகானமியில் பந்துவீசி 25 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும், 102 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

இதனால், கிரிக்கெட் குறித்த அனுபவம், சிஎஸ்கே அணியின் கலாச்சாரம் மற்றும் வீரர்களுடனான நெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, எதிர்காலத்தில் ரெய்னாவுக்கு அணியின் தலைமை பயிற்சியாளர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டால், அது சிஎஸ்கேவுக்கு பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, ரெய்னா தலைமை பயிற்சியாளராகவும், தோனி ஆலோசகராகவும் செயல்படும் சூழல் உருவானால், அது சிஎஸ்கே ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தும். பல ஆண்டுகளாக களத்தில் இணைந்து செயல்பட்ட தோனி - ரெய்னா கூட்டணி, நிர்வாக மற்றும் பயிற்சி குழுவிலும் தொடர்வது அணிக்கு கூடுதல் பலமாக அமையக்கூடும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES