2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் வீரர்கள் பரிமாற்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வீரர்களை டிரேட் செய்து வருகிறது. முதற்கட்டமாக நேதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கொடுத்துவிட்டு, மாற்றாக லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜான் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கினர்.
இந்த சூழலில், அடுத்த கட்டமாக டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் அக்சர் படேலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அக்சர் படேலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை வழங்க சிஎஸ்கே அணி முடிவு செய்திருந்தது. இரு அணி நிர்வாகமும் இதற்கு ஒப்புக்கொண்டதுடன், வீரர்களிடம் சம்மதம் கேட்ட நிலையில், அவர்களும் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் டிரேடிங் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.
இந்த நிலையில், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை உரிமையாளர் பார்த் ஜிந்தால் இந்த ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சிஎஸ்கேவின் அக்சர் படேல் டிரேடிங் முயற்சி கைகூடாமல் போனது. இந்த திடீர் பின்னடைவால் அதிருப்தியடைந்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், அடுத்தகட்ட நகர்வு குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அணியில் தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்த வார இறுதிக்குள் டிரேடிங் நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்பதால், குறுகிய கால அவகாசத்தில் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் உள்ள சாய் கிஷோர் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை தங்களுக்கு வழங்குமாறு சிஎஸ்கே கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக நூர் அகமது அல்லது உர்வில் படேல் ஆகியோரில் ஒருவரை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், சாய் கிஷோரை பெற வேண்டுமென்றால் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை விட்டுக்கொடுக்க வேண்டும் என குஜராத் அணி நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் மகேந்திர சிங் தோனியும் தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய் கிஷோர் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக, குஜராத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மனவ் சுதாரை வாங்க முயற்சி செய்யலாம் என தோனி ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோருக்கு அடுத்த நிலையிலேயே மனவ் சுதார் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரை டிரேடிங் மூலம் விடுவிக்க அந்த அணி சம்மதிக்க வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே கணக்கு போடுகிறது.
மனவ் சுதாரின் டி20 புள்ளிவிவரங்களும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளன. இதுவரை 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 28 போட்டிகளில் பந்துவீசி 7.33 எகனாமியில் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 127.02 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று வரும் மனவ் சுதாரை, ஐபிஎல் மூலம் மேலும் வளர்த்தெடுக்க தோனி விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வாங்குவதற்கு வீரர் பரிமாற்றத்துடன் பணத்தையும் வழங்க சிஎஸ்கே தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஐபிஎல் ஏலத்திலும் சிஎஸ்கே சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.பேட்டிங் வரிசையில் ஏற்கெனவே போதுமான வீரர்கள் இருப்பதாகக் கருதும் சிஎஸ்கே நிர்வாகம், ஏலத்தில் பேட்டர்களைத் தேடி அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டிரேடிங்கில் மனவ் சுதாரை வாங்கும் முயற்சியும், ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் திட்டமும் சிஎஸ்கேவின் அடுத்தகட்ட நகர்வுகளாக பார்க்கப்படுகின்றன.