SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தோனி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா? காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

சிஎஸ்கே அணியின் பங்குகளை தோனி கேட்டதாக வெளியான தகவல் வதந்தி என காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

Written By R Balaji
Published: Sep 01, 2026, 17:19 IST | Updated: Sep 01, 2026, 17:21 IST
Join

சிஎஸ்கே அணியின் 25 சதவீத பங்குகளை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அந்த விவகாரத்திற்கு சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க விரும்பியதாக வெளியான செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், 2027 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அவரிடம் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை என்றும் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியை சுற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்வதாகவும், இதற்காக சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.

அதேபோல், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகியதாகவும் முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஃபிளமிங் முடிவு செய்ததாலேயே சிஎஸ்கேவில் இருந்து விலகியதாக விளக்கம் வெளியானது.

இதற்கிடையே, சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால் அதையும் சிஎஸ்கே நிர்வாகம் மறுத்தது.

இந்த நிலையில், தோனி தொடர்பான பங்கு விவகாரம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தோனி அணியின் 25 சதவீத பங்குகளை வாங்க விரும்பியதாகவும், அதற்கு நிர்வாகம் குறைந்த அளவிலான பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் தோனி 18.5 சதவீத பங்குகளை கேட்டதாகவும், நிர்வாகம் 5.5 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதன் காரணமாக தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது காசி விஸ்வநாதன் அளித்துள்ள விளக்கம் அந்த தகவல்களுக்கு முற்றிலும் மாறானதாக உள்ளது.

தோனி பங்குகளை கேட்டதாக வெளியான தகவல்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், அது வெறும் வதந்தி என்றும் காசி விஸ்வநாதன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தோனி தரப்பில் இருந்து 'இல்லை' என்ற பதில் எதுவும் வரவில்லை என்றும் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தற்போது 45 வயதை எட்டியுள்ள தோனி, கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இதனால் 2027 சீசனுக்கு முன்பாக அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும், தோனியின் அடுத்தகட்ட முடிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES