கிரிக்கெட் நாளுக்கு நாள் நவீனம் பெற்றே வருகிறது. டி20 கிரிக்கெட் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ள நிலையில், தற்போது டி10 கிரிக்கெட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் குறுகிய ஓவர்கள் கொண்ட டி20, டி10 தொடர்களில் அதிரடியாக விளையாடும் பேட்டர்கள் மட்டுமே இடம் பெறுகின்றனர். ரசிகர்களை தனது சிக்சர் மழையால் பேட்டர் நனைய வைத்து வருகின்ற காலமாக இது உள்ளது.
இப்படியான நவீன காலத்தில் டி20 ஃபார்மெட்டில் பவர்பிளேவில் 100 ரன்களை அடிப்பதை நாம் பெரிய விஷயமாக பேசி வருகிறோம். அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பே வெறும் 3 ஓவர்களில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் ஜாம்பவான் டான் பிராட்மேன்.
3 ஓவர்களில் 100 ரன்களா? இத்தனைக்கும் ஒரு நோ-பால் கூட வீசப்படவில்லையா? இது எப்படி சாத்தியம்? என்று இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தின் சுவாரஸ்யமான பின்னணியை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 1931 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிளாக்ஹீத் மற்றும் லித்கோ ஆகிய இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிளாக்ஹீத் அணிக்காக களமிறங்கி விளையாடிய டான் பிராட்மேன், ரசிகர்களை ட்தனது சிக்சர் மழையால் வியப்பில் ஆழ்த்தினார்.
இன்றைய கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசும் முறை நடைமுறையில் இருந்தது.
பிராட்மேன் உடன் வெண்டல் பில் இருந்தார். அவர் 2 பந்துகள் மட்டுமே பிடித்து 2 ரன்களை மட்டுமே அடித்தார். மீதமுள்ள 22 பந்துகளை எதிர்கொண்ட டான் பிராட்மேன் 100 ரன்களை அடித்து அசத்தி வரலாற்று சாதனை படைத்தார். அதாவது முதல் ஓவரில் 33 ரன்கள், இரண்டாவது ஓவரில் 40 ரன்கள் மற்றும் மூன்றாவது ஓவரில் 27 ரன்களை குவித்தார்.
ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட்ட அன்றைய காலகட்ட விதிகளின்படி, பிராட்மேன் வெறும் 2.4 ஓவர்களிலேயே, அதாவது 22 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து வரலாற்று சாதனை படைத்தார். இன்றைய நவீன கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் மட்டுமே வீசப்படுகின்றன. தற்போதைய விதிகளின்படி பார்த்தால், 2.4 ஓவர்கள் என்பது வெறும் 16 பந்துகள் மட்டுமே!
ஒரு பேட்டர் இந்த 16 பந்துகளையும் சிக்சர்களாகவே மாற்றினாலும் கூட அதிகபட்சமாக 96 ரன்களை மட்டுமே எடுக்க முடியும். இதனாலேயே, பிராட்மேனின் இந்த அசாத்தியமான அதிவேக சத சாதனையை இனி வருங்காலத்தில் எந்தவொரு வீரராலும் முறியடிக்கவே முடியாது.
தனது வாழ்நாளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த சர் டான் பிராட்மேனிடம், பல ஆண்டுகளுக்குப் பிறகு "உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ் எது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "2.4 ஓவர்களில் சதம் அடித்த அந்த ஆட்டத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. உண்மையில் அது எந்தவித முன் திட்டமிடலும் இன்றி அமைந்த ஒன்று. அதிவேகமாக சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் அன்று களமிறங்கவில்லை; இயல்பாக ஆடிய ஆட்டத்தில் எதிர்பாராமல் அப்படி ஒரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய டி20 மற்றும் டி10 கிரிக்கெட் யுகத்தில் அதிவேக அரைசதங்களும் சதங்களும் சர்வசாதாரணமாகிவிட்டாலும், பிராட்மேன் நிகழ்த்திய இந்த 2.4 ஓவர் சதம் என்பது கிரிக்கெட் வரலாற்றுபுத்தகங்களில் என்றும் ஒரு தனித்துவமான சாதனையாகும். கிரிக்கெட்டில் தொழில்நுட்ப வசதிகளோ, பிரமாண்ட பேட் இல்லாத அந்த காலக்கட்டத்திலேயே படைக்கப்பட்ட இந்த சாதனை, சர் டான் பிராட்மேன் ஏன் 'கிரிக்கெட் உலகின் எக்காலத்திற்குமான ஜாம்பவான்' என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உரக்க சொல்கிறது.