SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

MI டூ PBKS.. கேப்டன் பதவி கிடையாது.. ஹர்திக் பாண்டியாவுக்கு வந்த ஆஃபர்! Explained

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ. 16 கோடி சம்பளம் பெற்ற ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ. 18 கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது எப்படி? அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுமா? உள்ளிட்ட விவரங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Nov 11, 2026, 05:28 PM IST | Updated: Nov 11, 2026, 05:32 PM IST
Join

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 18 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கடந்த 11 சீசன்களாக அவர் பெற்றுவந்த சம்பளத்தில் இதுவே அதிகபட்சமாக அமைந்துள்ளது. அதேநேரத்தில், பஞ்சாப் அணியில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

ஹர்திக்கின் சம்பளம் ரூ. 16.35 கோடியிலிருந்து ரூ. 18 கோடியாக உயர்ந்தது எப்படி?

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா ரூ. 16.35 கோடி சம்பளம் பெற்றார். தற்போது 2027 சீசனுக்காக அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ள நிலையில், அவரது சம்பளம் ரூ. 18 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவருக்கு ரூ. 1.65 கோடி கூடுதல் சம்பளம் கிடைத்துள்ளது.

இந்த சம்பள உயர்வுக்கு மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் பரிமாற்றமே முக்கிய காரணம். பஞ்சாப் அணியில் விளையாடி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார். அவருக்கு பஞ்சாப் அணியில் ரூ. 18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இதனால், அர்ஷ்தீப் சிங்கின் சம்பளத்துக்கு இணையாக ஹர்திக் பாண்டியாவுக்கும் ரூ. 18 கோடி வழங்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணியில் ஹர்திக்குக்கு கேப்டன் பதவி கிடைக்காதா?

ஐபிஎல் 2022 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா, அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். தனது முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இறுதிபோட்டிக்கும் அணியை அழைத்து சென்றார். அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் குஜராத் தோல்வியடைந்தது.

இதையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக், அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில், 2027 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்வதன் மூலம் கடந்த 2022 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பின்றி அவர் விளையாட உள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்ட்னாக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். எனவே, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. கேப்டன் பொறுப்பு கிடைக்காத நிலையில், ஒப்பந்தத்தை ஏற்க செய்வதற்காக ஹர்திக் கூடுதல் சம்பளத்தை கேட்டிருக்கலாம்.

டிரேடுக்கு வீரர்களின் ஒப்புதல் அவசியமா?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்த வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான தங்களது விருப்பத்தை சில வாரங்களுக்கு முன்பே பிசிசிஐயிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், டிரேடு நடைமுறைக்கு வருவதற்கு இரு அணிகளின் ஒப்புதல் மட்டுமின்றி சம்பளம் உள்ளிட்ட ஒப்பந்த நிபந்தனைகளில் சம்பந்தப்பட்ட வீரர்களின் சம்மதமும் அவசியம். இதன்படி, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்ட பிறகே இந்த பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வெளியேறுவது குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், ஹர்திக்கின் கிரிக்கெட் வளர்ச்சி, சர்வதேச அளவில் அவர் பெற்ற சாதனைகள் மற்றும் அணிக்கு தலைமை தாங்கிய விதம் ஆகியவற்றை பாராட்டியுள்ளார். மும்பை அணிக்காக அவர் வழங்கிய பங்களிப்புக்கும் போட்டி மனப்பான்மைக்கும் நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்காலப் பயணத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு வினோத் டிரேடில் இடம்பெறவில்லையா?

இந்த வீரர்கள் பரிமாற்றத்தில் கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விஷ்ணு வினோத்தும் இடம்பெறுவார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது, அர்ஷ்தீப் சிங்குடன் அவரும் பஞ்சாப் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இறுதியில் விஷ்ணு வினோத்தைத் தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் கிங்ஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், பிரப்சிம்ரன் சிங்குக்கு மாற்று விக்கெட் கீப்பராக விஷ்ணு வினோத் அணியில் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் ஏலங்களில் தொடர்ந்து மூன்று முறை விற்பனையாகாமல் இருந்த விஷ்ணு வினோத், 2021ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ், 2022ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2023ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ், 2025ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிகளால் வாங்கப்பட்டார். இருப்பினும், ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த மூன்று போட்டிகளும் 2023ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவை. 2026 சீசனுக்கு முன்னதாக ரூ.95 லட்சம் சம்பளத்தில் அவரை பஞ்சாப் அணி தக்கவைத்திருந்தது.

மும்பை அணிக்கு பலம் சேர்க்கும் அர்ஷ்தீப் சிங்

ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்குச் செல்லும் நிலையில், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார். ஏற்கெனவே அணியில் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் நிலையில், அவருடன் அர்ஷ்தீப் இணைவது மும்பையின் வேகப்பந்து வீச்சுப் பிரிவுக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். அவரது வருகை அணியின் பந்துவீச்சில் அனுபவம், திறமை மற்றும் போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும் என மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மும்பை அணியின் புதிய கேப்டன் யார்?

ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ள நிலையில், 2027 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுவரை புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை அந்த அணி வெளியிடவில்லை.

கேப்டன் தேர்வு தொடர்பாக உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES