ஹர்திக் பாண்டியாவுக்கு அக்சர் படேல்.. MI - DC இடையே டிரேட் டீல்? முழு விவரம்
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றுவது குறித்தும், இதற்கு பதிலாக அக்சர் படேலை வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு அமையாத நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர்பான டிரேடிங் பேச்சுவார்த்தைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக அக்சர் படேலை மாற்று வீரராக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹர்திக் பாண்டியாவால் ஏற்பட்ட அதிருப்தி?
2026 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்ததாக கூறப்படும் நிலையில், அணியின் செயல்பாடு குறித்த விமர்சனங்கள் அதிகரித்தன. இதற்கிடையே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சித்ததாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், ஹர்திக் பாண்டியா அணியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அவரை வேறு அணிக்கு மாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் செய்திகள் பரவின.
சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுடன் பேச்சுவார்த்தை?
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற ஹர்திக் பாண்டியா விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் மாற்று வீரரை வழங்குவது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் முயற்சி கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களை விடுவிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த முயற்சியும் முன்னேறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்சர் படேலை கொடுத்து ஹர்திக்கை வாங்க டெல்லி திட்டம்?
ஹர்திக் பாண்டியா டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தால், அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.எல். ராகுல் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை என்ற தகவல்களும் இந்த சூழலில் பேசப்படுகின்றன.
இதற்கு முன்பு ரிஷப் பண்ட்டை மீண்டும் அணிக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவை வாங்க டிசி அணி முயற்சிப்பது கவனம் பெற்றுள்ளது.
ஐபிஎல் பட்டத்தை இதுவரை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி, அனுபவமும் தலைமை பண்பும் கொண்டவீரர் மூலம் அணியை வலுப்படுத்த விரும்பலாம். ஹர்திக் பாண்டியா அணியில் இணைந்தால், அந்த அணியின் தலைமை மற்றும் ஆட்டத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் இடையிலான இந்த பரிமாற்றம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், டிரேடிங் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கருதுவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.