SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IND டி20 அணியில் புதிய மாற்றங்கள்? இவர்களுக்கெல்லாம் ஆபத்து! கம்பீர் திட்டம் என்ன? Explained

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புவனேஷ்வர் குமார், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களின் வாய்ப்பு குறையும் என்றும், 2028 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் விவாதம் எழுந்துள்ளது.

Written By R Balaji
Published: Nov 03, 2026, 05:20 PM IST | Updated: Nov 03, 2026, 05:26 PM IST
Join

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தாலும், அணியின் செயல்பாடு தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு திருப்தி அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, பந்து வீச்சில் இந்திய அணி தடுமாறியதும் சில வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததும் அணித் தேர்வு குறீத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமாரின் இந்திய அணிக்கான வாய்ப்பு இனி கடினமாக இருக்கலாம் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அடுத்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் வரலாம்? எந்த வீரர்களுக்கு வாய்ப்பு குறையலாம்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு

நியூசிலாந்து சென்ற இந்திய அணி 5 பொட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் 19.4 ஓவர்களிலும் இரண்டாவது போட்டியில் 19.5 ஓவர்களிலும் இலக்கை எட்டிய இந்திய அணி, இரு ஆட்டங்களிலும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. ஆனால், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை இந்திய அணி வெறும் 13.2 ஓவர்களிலேயே துரத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.

ஆனால், கடைசி இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்தியாவுக்கு சவால் அளித்தது. இதனால் தொடரை இந்தியா 3-2 என வென்றாலும், அனைத்து போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. குறிப்பாக, நியூசிலாந்து அணியில் வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத சூழலிலும் இந்திய முதல் 2 போட்டிகளில் கடுமையாக போராடியது. மூன்றாவது போட்டியில் மட்டுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இதனால், இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம்

புவனேஷவர் குமார் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக விளையாடவில்லை. இத்தொடரில் அவர் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். மேலும், அவரது எகானமி 11.50ஆக இருந்தது.

ஐபிஎல் 2026 தொடரில் 16 போட்டிகளில் 28 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அவர் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால், நியூசிலாந்து தொடரில் அவரது செயல்பாடு அந்த அளவுக்கு இல்லை.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். புவனேஷ்வர் குமார் ஐபிஎல் தொடரில் காட்டிய செயல்பாட்டுக்கும், நியூசிலாந்து தொடரில் வெளிப்படுத்திய ஆட்டத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்ததாக அஸ்வின் குறிப்பிட்டார்.

மேலும், புவனேஷ்வர் தனது பழைய வேகம் மற்றும் தீவிரத்துடன் பந்துவீசவில்லை என்றும், இந்த தொடருக்கு முன்பு அவர் போதிய பயிற்சி மேற்கொண்டாரா என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். அனுபவ வீரர் என்பதால், இளம் வீரர்களுக்கு கிடைப்பது போல அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம் என்றும் அஸ்வின் கூறினார். இதனால், புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.

முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

புவனேஷ்வர் குமார் குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், முகமது ஷமியின் தற்போதைய செயல்பாட்டையும் சுட்டிக்காட்டினார்.

இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடாத ஷமி, தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். அங்கு அவரது பந்துவீச்சு நல்ல ரிதத்தில் இருப்பதாக அஸ்வின் குறிப்பிட்டார். புவனேஷ்வர் குமாரை விட ஷமி தற்போது சிறந்த பந்துவீச்சு நிலையில் இருப்பதாக தான் கருதுவதாகவும் அஸ்வின் தெரிவித்தார்.

இதனால், இந்திய டி20 அணியில் வேகப்பந்து வீச்சு பிரிவில் மாற்றங்கள் ஏற்பட்டால், ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷிவம் துபேவுக்கு பதிலாக நிதிஷ் ரெட்டியா?

ஷிவம் துபேவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் அவர் 10 டி20 போட்டிகளில் விளையாடி, 6 இன்னிங்ஸ்களில் 121 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு மாறாக, நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிப்பு அளித்து வருகிறார். அவர் 7 டி20 இன்னிங்ஸ்களில் 159.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 134 ரன்கள் எடுத்ததுடன், 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதனால், நிதிஷ் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

அக்சர் படேலின் இடத்துக்கு ஆபத்தா?

நியூசிலாந்து தொடரில் அக்சர் படேலின் செயல்பாடுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அவர், 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் சுழற்பந்து வீச்சு தேர்வு குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மாற்றம்?

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதாக கருதப்படும் நிலையில், பந்துவீச்சு பிரிவில் சில குறைபாடுகள் இருப்பதாக விவாதம் எழுந்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு உதவி செய்தாலும், மற்ற பந்துவீச்சாளர்களின் செயல்பாடு தொடர்ச்சியாக சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. இதனால், அடுத்தடுத்த தொடர்களில் பந்துவீச்சு பிரிவில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல், பீல்டிங்கிலும் இந்திய அணி மேம்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் கூட பீல்டிங்கில் தவறு செய்தால், அது அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம். இதனால், வீரர்களுக்கு கூடுதல் பீல்டிங் பயிற்சி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2028 டி20 உலகக் கோப்பையை குறிவைக்கும் இந்தியா

2028ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் விளையாடும் 11 வீரர்களை உறுதி செய்து, வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படலாம். அதற்கு முன்பு, வீரர்களின் தற்போதைய பார்ம், பந்துவீச்சு திறன், பேட்டிங் பங்களிப்பு மற்றும் பீல்டிங் செயல்பாடுகள் அடிப்படையில் அணித் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அடுத்த டி20 போட்டிகள் டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற உள்ளன. அந்த தொடரில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட வீரர்களின் தேர்வு மற்றும் செயல்பாடுகள் கவனிக்கப்படும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES