SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer: ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு பேக்கப் இல்லையா? இந்திய அணியின் பிளான்-B என்ன?

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வரிசையில் நிலவும் பேக்கப் வெற்றிடத்தை நிரப்பப்போகும் அந்த அடுத்த ஓப்பனர்கள் யார் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 15, 2026, 07:48 PM IST | Updated: Aug 21, 2026, 04:28 PM IST
Join

தொடக்க காலத்தில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் பலமே பேக்கப் வீரர்கள்தான். அதாவது பிளேயிங் 11ல் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவருக்கு நிகரான ஒரு பேக்கப் வீரர் அணியில் இருப்பார். உதாரணத்திற்கு,

அஜிங்க்யா ரஹானே - கருண் நாயர் (2016): இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு காயம் ஏற்பட்ட போது, பேக்கப் வீரராக களமிறங்கிய கருண் நாயர் தனது அறிமுக தொடரிலேயே முச்சதம் விளாசி அசத்தினார்.

பார்டர் கவாஸ்கர் 2020-21: விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் என முன்னணி வீரர்கள் அனைவரும் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகியபோது, அவர்களுக்கு மாற்றாக களமிறங்கிய முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் தாக்கூர் மற்றும் சுப்மன் கில் ஆகிய பேக்கப் வீரர்கள் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்று காட்டினர்.

ஆனால் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர், ஆல்-ரவுண்டர், பவுலர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பேக்கப் வீரர்கள் இருந்தாலும், தொடக்க வீரர்கள் இடத்திற்கு தரமான பேக்கப் வீரர்கள் இல்லை. கே.எல். ராகுலுக்கோ அல்லது யஷ்யஸ்வி ஜெய்ஸ்வாலுக்கோ காயம் ஏற்பட்டால், இந்திய அணி நிர்வாகம் யாரை ஓப்பனராக களமிறக்கும்? இந்த கேள்வி தற்போது பெரிதாகி உள்ளது.

இன்று இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி உள்ளது. முதல் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், தொடக்க வீரர் கே.எல். ராகுல் 77 ரன்கள் அடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக ரிடையர் ஹர்ட் ஆனார். ஒருவேளை இந்த காயம் பெரிதாகி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனால், அந்த இடத்தில் யாரை இறக்குவார்கள். அவருக்கு இணையான வீரர் யார் இருக்கிறார்? இல்லை தற்போது இல்லாவிட்டாலும் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால ஓப்பனர் யார்? யோசித்து பார்த்தால் தரமான வீரர்கள் யார் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  

இன்னும் கூர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த வீரர்களை பார்க்கும்போது, எதிர்கால இந்திய டெஸ்ட் அணியின் ஒப்பனர்களாக 4 வீரர்கள் இருப்பதுபோல் தெரிந்தது.

1. அபிமன்யு ஈஸ்வரன் (Abhimanyu Easwaran)

ரஞ்சி கோப்பை மற்றும் முதல்தரப் போட்டிகளில் வங்காள அணிக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவித்து வருபவர். புதிய பந்தின் ஸ்விங்கை திறம்பட கையாண்டு, நீண்ட நேரம் நிலைத்து நின்று இன்னிங்ஸை கட்டமைக்கும் கிளாசிக்கல் டெஸ்ட் பேட்ஸ்மேன். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் பேக்கப் தொடக்க வீரராக பலமுறை அணியுடன் பயணித்த அனுபவம் இவருக்கு உள்ளதால், தேர்வுக்குழுவின் முதன்மை தேர்வாக இவர் இருப்பார்.

2. ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad)

ருதுராஜ் கெய்க்வாட் அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களுக்கும் ஏற்ற சிறந்த பேட்டிங் தொழில்நுட்பத்தை கொண்டவர். இந்தியா 'ஏ' மற்றும் மகாராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்தை லேட்டாக ஆடி பவுண்டரிகளை விரட்டும் நுணுக்கம் கொண்டதால், நீண்டகால டெஸ்ட் திட்டத்தில் இவருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.

3. பிரித்வி ஷா (Prithvi Shaw)

டெஸ்ட் அரங்கில் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி முத்திரை பதித்த இளம் வீரர் பிரித்வி ஷா. சேவாக் பாணியில் ஆக்ரோஷமாக ஆடி எதிரணியின் வேகப்பந்து வீச்சை ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைக்கும் அசுர பலம் கொண்டவர். உடற்தகுதியையும் சீரான ஆட்டத்தையும் மீட்டெடுத்தால், வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்தியாவுக்கு இவரே துருப்பு சீட்டாக அமையலாம்.

4. ரிக்கி பூய் (Ricky Bhui)

ஆந்திரா அணிக்காக ரஞ்சி தொடரில் மலைபோல் ரன்களை குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரிக்கி பூய். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த இடத்திலும் களம் கண்டு சதம் விளாசும் மன உறுதி கொண்டவர். தொடக்க வீரராகவும் களமிறங்கும் திறமை இவருக்கு இருப்பதால் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறார்.

அணி நிர்வாகத்தின் பிளான் - B திட்டம்

புதிய வீரர்களை நேரடியாக அழைப்பதற்கு முன்பாக, அணியில் ஏற்கனவே உள்ள சில வீரர்களை ஓப்பனராக மாற்றும் உத்திகளையும் அணி நிர்வாகம் கையில் எடுக்க வாய்ப்புள்ளது.

சுப்மன் கில் (Shubman Gill): தற்போது 3 ஆம் வரிசையில் களமிறங்கினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடக்க வீரராகவே தொடங்கினார். ராகுல் இல்லாத சூழலில், இவரை மீண்டும் ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் இறக்கிவிட்டு, மிடில் ஆர்டரில் சர்பராஸ் கான் அல்லது துருவ் ஜூரெலுக்கு இடம் கொடுக்கலாம்.

சாய் சுதர்சன் (Sai Sudharsan): உள்ளூர் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் புதிய பந்தை மிக நேர்த்தியாக கையாண்டு வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனையும் மாற்றுத் தொடக்க வீரராக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

பிசிசிஐ-யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 20 ஓவர்களை புதிய பந்தில் தாக்குப்பிடித்து, தொடக்க ஜோடி அமைத்து கொடுக்கும் வலுவான அடித்தளமே அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது. மிடில் ஆர்டர் மற்றும் பந்துவீச்சு பிரிவில் பலமான மாற்று வீரர்கள் இருப்பதை போல, தொடக்க வரிசைக்கும் 2 அல்லது 3 நிரந்தர பேக்கப் வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பது பிசிசிஐக்கு மிக அவசியமானது.

தற்போதைய சூழலில் கே.எல். ராகுலுக்கு மாற்று வீரராக உடனடியாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அனுபவ அடிப்படையில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரில் ஒருவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய அணி அடுத்தடுத்து முக்கிய டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தொடக்க வரிசைக்கான நிரந்தர பேக்கப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். ரஞ்சி கோப்பை மற்றும் இந்தியா 'ஏ' தொடர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு போதிய சர்வதேச வாய்ப்புகளை வழங்கி, அவர்களை இப்போதே மனதளவில் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES