இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையில் ஏசியன் கேம்ஸ் ஆடவர் கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளது. இத்தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 03 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் இந்திய அணி தேர்வில் ஏசியன் கேம்ஸ் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், அக்சர் படேல் என சில வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், வெஸ்ட் இண்டீஸ் தொடரை பயன்படுத்தி சில அனுபவமிக்க வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, க்ருணால் பாண்டியா, ரஜத் படிதர், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு பிளேயிங் 11னிலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வீரருக்கு, 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியில் தொடர வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக க்ருணால் பாண்டியாவின் செயல்பாட்டை தேர்வுக்குழு உன்னிப்பாக கவனிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான உத்தேச அணியில் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் மற்றும் ரஜத் படிதர் ஆகியோர் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இதில் ரஜத் படிதர் 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தும் நிலையில், அவருக்கு அடுத்தடுத்த தொடர்களிலும் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ஹர்திக் பாண்டியா, மனவ் சுதார், க்ருணால் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பங்களிக்கக்கூடிய வீரர்களாக இவர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பந்துவீச்சு பிரிவில் முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வேகப்பந்து வீச்சில் அனுபவம் மற்றும் சுழற்பந்து வீச்சில் குல்தீப்பின் திறமை ஆகியவற்றை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிடலாம்.
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், ரஜத் படிதர், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, மனவ் சுதார், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. அக்டோபர் 06 ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து அக்டோபர் 9, 11, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் மீதமுள்ள போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒருநாள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான இந்திய அணியை இப்போதே கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் பல வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க முக்கியமான வாய்ப்பாக அமைய உள்ளது.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பெறக்கூடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினால், 2027 உலகக் கோப்பைக்கான அணியில் அவர்களது இடம் மேலும் வலுப்பெறும் என கூறப்படுகிறது.