SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக நிலவிய இடதுகை பேட்ஸ்மேன்களின் பற்றாக்குறை நீங்கி, தற்போது டாப் ஆர்டர் முதல் 8-வது இடம் வரை வலுவான 'லெப்ட்-ரைட்' கூட்டணி உருவாகியிருப்பதன் பின்னணி மற்றும் அதனால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து இங்கு விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

Written By R Balaji
Published: Nov 27, 2026, 17:48 IST | Updated: Nov 27, 2026, 18:19 IST
Join

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாகவே வலது கை பேட்ஸ்மேன்கள்தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களத்தில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மேன்களை கண்டறிவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், அந்த நிலை முற்றிலுமாக மாறி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் டாப் ஆர்டர் முதல் கீழ் வரிசை வரை இடது கை பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பேட்டிங் வரிசையில் இடது கை - வலது கை கூட்டணி புதிய பலத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது எந்த அளவிற்கு சாதகமான பலனை தரும் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஏன் இந்த பற்றாக்குறை?

அந்த காலத்தில் இந்தியாவில் இடதுகைப் பழக்கம் பற்றிய மக்களுடைய பார்வை இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். வலதுகையை பயன்படுத்துவதுதான் சரி என்ற எண்ணம் இருந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் இடதுகை பழக்கம் கொண்ட குழந்தைகளை கட்டாயப்படுத்தி வலதுகைக்கு மாற்றும் முயற்சிகள் நடந்ததாம். இதன் காரணமாகவே கிரிக்கெட்டில் இடதுகை பேட்டர்களின் ஆதிக்கம் குறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

நம்பிக்கை கொடுத்த கடந்த கால ஸ்டார் வீரர்கள்

ஒரு காலத்தில் இந்திய அணியில் தரமான இடது கை பேட்ஸ்மேன்கள் கிடைப்பது அரிதாகவே இருந்தது. அவ்வப்போது சில வீரர்கள் அணிக்குள் வந்து சிறப்பாக செயல்படுவார்கள். இருப்பினும், நீண்ட காலம் தங்களது இடத்தை தக்கவைத்து கொள்வது அவர்களுக்கு சவாலாக இருந்தது.

முதன் முதலில் செல்லும் படியாக ஒரு இடது கை வீரர் என்றால் அது வினோத் காம்பளிதான். அவர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தொடங்கத்திலேயே அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், இந்திய அணிக்கு நீண்ட காலம் விளையாடும் வாய்ப்பை அவரால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை.

அதன்பிறகு, சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு வலுசேர்த்தார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர், 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதனைத் தொடர்ந்து கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்களும் இந்திய அணிக்காக பங்களித்தனர். ஆனால் அவர்களால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததே தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேனின் பற்றாக்குறை நீடித்துக்கொண்டே இருந்தது.

மாறிய காலம்: டி20 முதல் டெஸ்ட் வரை

ஆனால், இன்று அப்படி இல்லை.. நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இது இளம் இடது கை வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கியது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி என அதிரடி இடதுகை வீரர்கள் அணியை ஆக்கிரமித்தனர். ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே மற்றும் அக்சர் படேல் இணைந்ததால், டி20 அணியில் 8-வது இடம் வரை இடது - வலது கை பேட்டர்களின் கூட்டணி சாத்தியமானது.

டெஸ்ட் அணியிலும் ’லெஃப்ட் - ரைட்’ கூட்டணி

தற்போது இந்த மாற்றமானது டெஸ்ட் அணிக்குள்ளும் நிகழ்ந்துள்ளது. சமீபத்திய வெலிங்டன் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 8-வது இடம் வரை 4 வலதுகை மற்றும் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருந்தனர்.

வலதுகை பேட்ஸ்மேன்கள்: கே.எல். ராகுல், கேப்டன் சுப்மன் கில், துருவ் ஜூரல், அன்ஷுல் கம்போஜ்.

இடதுகை பேட்ஸ்மேன்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர்.

எதிரணி பவுலர்களுக்கு ஏற்படும் நெருக்கடி

களத்தில் ஒரு வலதுகை மற்றும் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இணைந்து ஆடும்போது, பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திற்கும் தங்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, இருவரும் மாறி மாறி சிங்கிள்ஸ் எடுக்கும்போது பவுலர்களின் ரிதம் விடுபடுகிறது. அதேபோல், ஃபீல்டிங்கையும் அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். இது எதிரணியின் கேப்டனுக்கு பெரும் தலைவலியாக அமைகிறது.

நம்பிக்கை தரும் புதிய கூட்டணி

தொடக்க ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் பயமில்லாத ஆட்டமும், கே.எல். ராகுலின் நிதானமும் அணிக்குப் பலம் சேர்க்கிறது. டிராவிட், புஜாரா ஆகியோருக்குப் பிறகு 3-வது இடத்தில் தேவ்தத் படிக்கல் தன்னை நிரூபித்து வருகிறார். அவரின் உயரமும் இடதுகை ஆட்டமும் பவுலர்களைத் திணறடிக்கிறது. 4-வது இடத்தில் கேப்டன் கில் அபாரமான ஃபார்மில் இருக்க, 5-வது இடத்தில் ரிஷப் பண்ட் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராகத் திகழ்கிறார். 6-வது இடத்தில் துருவ் ஜூரலும், அவருக்குப் பின்னால் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரும் இருப்பது இந்திய பேட்டிங் வரிசைக்கு அசுர பலத்தைக் கொடுத்துள்ளது.

இந்த வீரர்கள் அனைவரும் காயமின்றி முழு உடற்தகுதியுடன் விளையாடும் பட்சத்தில், உலகின் எந்தவொரு தலைசிறந்த பந்துவீச்சு படையாலும் இவர்களை கட்டுப்படுத்த திணறும் என்பதில் சந்தேகமில்லை. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES