ரூ. 40 கோடி சம்பளம் வேண்டுமாம்.. ஐபிஎல் அணிகளிடம் டிமெண்ட் வைக்கும் வீரர்கள்!
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக சில முன்னணி வீரர்கள் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 2028 மெகா ஏலத்திற்கு அணிகளின் ஏலத் தொகை ரூ.150 கோடியாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2027 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாகவே சில முன்னணி வீரர்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள ரூ. 40 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தை கருத்தில் கொண்டு, வீரர்கள் தங்களுக்கான அதிகபட்ச சம்பளத்தை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
ரூ. 40 கோடி சம்பளம் கேட்கும் வீரர்கள்?
ஐபிஎல் 2027 மினி ஏலம், தற்போதைய ஏல சுழற்சியில் நடைபெறும் கடைசி மினி ஏலமாக இருக்கும். மினி ஏலத்தில் பெரும்பாலான அணிகளுக்கு 5 முதல் 6 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய இடங்கள் இருக்கும். ஆனால், 2028 ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள மெகா ஏலத்தில் அணிகள் தங்களது வீரர் பட்டியலை புதிதாக அமைக்க வேண்டியிருக்கும்.
இந்த மெகா ஏலம் 2027 டிசம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்பாகவே வீரர்கள் தங்களது சம்பளத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்பஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சில முன்னணி ஐபிஎல் வீரர்கள் தங்களை தக்கவைத்து கொள்வதற்கான சம்பளமாக ரூ. 40 கோடியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொகை வழங்கப்பட்டால் தங்களது தற்போதைய அணியிலேயே தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் இதுகுறித்து அணிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதும் வீரர்களும் இதே வழியை தேர்வு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வீரருக்கு ரூ.40 கோடி சம்பளம் வழங்கப்பட்டதில்லை. கடந்த 2025 ஏலத்தில் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது. இதுவே இதுவரை ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரருக்காக வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளமாக இருந்தது.
இந்த நிலையில், வீரர்கள் ரூ.40 கோடி சம்பளத்தை எதிர்பார்ப்பது ஐபிஎல் அணிகளுக்கு புதிய சவாலாக அமையலாம்.
ரூ.120 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயருமா?
தற்போது ஐபிஎல் அணிகளின் மொத்த ஏலத் தொகை ரூ.120 கோடியாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் இந்த தொகை ரூ.150 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு ஏல தொகை உயர்த்தப்பட்டால், அணிகள் தங்களது வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், முக்கிய வீரர்களை தக்கவைத்து கொள்வதற்கான போட்டியும் அதிகரிக்கலாம்.
ஐபிஎல் 2027 ஏலம் எப்போது?
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்கவைத்துக் கொள்வது மற்றும் விடுவிப்பது தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்க அணிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலில் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் 17ம் தேதி வரை அணிகள் தங்களது பட்டியலை இறுதி செய்யலாம். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி நவம்பர் 15ம் தேதி நடைபெறுவதால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக Cricinfo தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. வீரர்கள் பதிவு பட்டியல் அணிகளுக்கு வழங்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து இறுதி ஏலப் பட்டியலை தயாரிக்கும். ஏற்கனவே நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றம் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக இதுவரை இரண்டு வீரர்கள் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து தனது முன்னாள் கேப்டன் ரிஷப் பந்தை மீண்டும் அணிக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு சென்றுள்ளார். மற்றொரு பரிமாற்றத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் ஜீஷான் அன்சாரி டெல்லி அணிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களின் சம்பள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், ஐபிஎல் அணிகளின் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.