• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /LA 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: அணிகள் தகுதி பெறுவது எப்படி? போட்டிகள் எப்போது? முழு அட்டவணை!

LA 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: அணிகள் தகுதி பெறுவது எப்படி? போட்டிகள் எப்போது? முழு அட்டவணை!

128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறும் நிலையில், அணிகளுக்கான தகுதி முறை, இந்தியாவின் வாய்ப்பு மற்றும் முழு போட்டி அட்டவணை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Written ByR Balaji
Published: Nov 21, 2026, 13:28 IST|Updated: Nov 21, 2026, 13:34 IST
joinshare
LA 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: அணிகள் தகுதி பெறுவது எப்படி? போட்டிகள் எப்போது? முழு அட்டவணை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 180 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு அணிகள் எவ்வாறு தகுதி பெறும்? இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா? போட்டிகள் எப்போது நடைபெறும்? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்!

கிரிக்கெட் கடையாக 1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றது. அப்போது நடைபெற்ற போட்டியில் கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதையடுத்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும்.

ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் இடம்பெறலாம். இதன்படி ஆண்கள் பிரிவில் 90 வீரர்களும் மகளிர் பிரிவில் 90 வீராங்கனைகளும் என மொத்தம் 180 பேர் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார்கள்.

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு அணிகள் எப்படி தகுதி பெறுகிறது?

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகள் மூன்று வழிகளில் தகுதி பெற முடியும். அதாவது, ஐசிசி தரவரிசை மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பை முடிவுகள், ஐசிசி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஆகியவற்றின் மூலம் தகுதி பெற முடியும். இதில் போட்டியை நடத்தும் அமெரிக்காவுக்கு நேரடியாக விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆண்கள் கிரிக்கெட்: இந்தியா உட்பட 4 அணிகளுக்கு வாய்ப்பு

ஆடவர் பிரிவில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும். இதில் 4 அணிகள் ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்று போட்டியை நடத்தும் அமெரிக்காவுக்கும், மற்றொன்று ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கும் வழங்கப்படும்.

2026 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி உள்ள ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசை இதற்கு பயன்படுத்தப்படும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகள்) ஆகிய கண்டங்களில் இருந்து தலா ஒரு அணிக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டியில் உள்ளன. இருப்பினும், ஆடவர் பிரிவில் எந்த அணியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.

மகளிர் கிரிக்கெட்: இந்தியா ஏற்கனவே தகுதி

மகளிர் பிரிவில் 4 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. 2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் அடிப்படையில் இந்த தேர்வானது நடந்துள்ளது. அதன்படி, இந்தியா (ஆசியா), ஆஸ்திரேலியா (ஓசியானியா), இங்கிலாந்து (ஐரோப்பா), தென்னாப்பிரிக்கா (ஆப்பிரிக்கா) ஆகிய நான்கு அணிகளும் 2028 ஒலிம்பிக் மகளிர் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்று போட்டியை நடத்தும் அமெரிக்காவுக்கும், மற்றொன்று ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கும் வழங்கப்படும்.

2027 மார்ச் 1 ஆம் தேதியில் உள்ள ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகள் தேர்வு செய்யப்படும்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று எப்போது?

ஒவ்வொரு பிரிவிலும் கடைசி இடத்தை தீர்மானிக்க 2028ஆம் ஆண்டு ஐசிசி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி நடத்தப்படும். இதில் ஏற்கனவே தகுதி பெறாத நாடுகளில் இருந்து தரவரிசையில் முன்னிலையில் உள்ள 8 அணிகள் பங்கேற்கும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும்.

  • ஆடவர் பிரிவுக்கான தகுதிச் சுற்று வங்கதேசத்தில் 2028 பிப்ரவரி 5 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • மகளிர் பிரிவுக்கான தகுதிச் சுற்று அமெரிக்காவில் 2028 பிப்ரவரி 26 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒலிம்பிக்கில் வாய்ப்பு இல்லையா?

ஒலிம்பிக் போட்டிகளில் ஒவ்வொரு நாட்டையும் அதன் தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOC) பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி என்பது கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் மற்றும் தீவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணியாகும். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தேசிய ஒலிம்பிக் கமிட்டி உள்ளது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் என்ற பெயரில் ஒலிம்பிக்கில் நேரடியாக பங்கேற்க முடியாது.

ஒருவேளை 2026 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி தகுதி பெறாத அணிகளின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் 8 இடங்களுக்குள் இருந்தால், அந்த பிராந்தியத்தை சேர்ந்த தகுதியான நாடுகளுக்காக கரீபியன் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டியை ஐசிசி நடத்தும். அதில் வெற்றி பெறும் நாட்டின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் அணி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கும். அதேபோல், கிரேட் பிரிட்டன் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிக்கான தகுதியை தீர்மானிக்கும்போது, இங்கிலாந்து அணியின் முடிவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி எப்படி நடைபெறும்?

2028 ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணிக்கும் தலா 20 ஓவர்கள் வழங்கப்படும். ஆண்கள் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் தலா 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 3 அணிகள் இடம்பெறும்.

முதல் சுற்று

ஒவ்வொரு அணியும் தனது குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

இரண்டாவது சுற்று

முதல் சுற்றில் ஒரு குழுவில் உள்ள அணிகள் தங்களுக்குள் விளையாடும். அதன்பிறகு, மற்றொரு குழுவில் தங்களுக்குச் சமமான இடத்தைப் பிடிக்காத இரண்டு அணிகளுடன் ஒவ்வொரு அணியும் மோதும். இதன் மூலம் ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 4 போட்டிகள் நடைபெறும்.

இறுதி போட்டி

இந்த நான்கு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இறுதிப் புள்ளிப்பட்டியல் தயாரிக்கப்படும். அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் மோதும். மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காக விளையாடும்.

இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 28 போட்டிகள் நடைபெற உள்ளன.

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி அட்டவணை 2028

மகளிர் கிரிக்கெட் போட்டிகள்

  • ஜூலை 12 முதல் ஜூலை 19 வரை முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
  • ஜூலை 20ஆம் தேதி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெறும்.
  • ஜூலை 20ஆம் தேதி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி நடைபெறும்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிகள்

  • ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
  • ஜூலை 28ஆம் தேதி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெறும்.
  • ஜூலை 29ஆம் தேதி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி நடைபெறும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer