இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வரும் அஜித் அகார்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே அவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் காரணமாக அகார்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4 வரை நீட்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, அடுத்த தேர்வுக்குழு தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பதவிக்கான போட்டியில் முன்னாள் இந்திய வீரர்களான பார்தீவ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீஅலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஓஜாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு கடந்த காலங்களில் அணித் தேர்வில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மூத்த வீரர்களின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை முன்கூட்டியே அறிவிப்பதில் தேர்வுக்குழு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
2027 ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடம் குறித்து தற்போதே இறுதி முடிவு எடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அகார்கர் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் நேரத்தில்தான் வீரர்களின் இடம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதே அவரது அணுகுமுறையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதும் கவனம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், அனுபவம் வாய்ந்த சில வீரர்களின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அகார்கரின் பதவிக்காலத்தை 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், அதற்கு சில மூத்த வீரர்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் பிசிசிஐ நிர்வாகிகளிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்ததாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன. எனினும், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு பிரக்யான் ஓஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரோகித் சர்மாவுடனான அவரது பழைய கிரிக்கெட் தொடர்பும் தற்போது பேசுபொருளாகி உள்ளது. ஓஜாவும் ரோகித்தும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள். இருவரும் 2012 முதல் 2015 வரை அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதனால் ஓஜா, தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் அவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஓஜா தேர்வுக்குழு தலைவராக வந்தால், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடம் குறீத்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல், வீரர்களை அவர்களின் தற்போதைய செயல்பாடு மற்றும் திறமை அடிப்படையில் தேர்வு செய்வதில் ஓஜா முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற கருத்துகளும் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ முடிவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்திய டி20 அணியின் சமீபத்திய தேர்வுகள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.
புதிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டால், வீரர்களைதேர்வு செய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு இடையிலான ஒருங்கிணைப்பு எப்படி இருக்கும் என்பதும் எதிர்காலத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எனினும், அகார்கருக்கு அடுத்ததாக யார் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுவார் என்பதும், புதிய குழு அமைக்கப்பட்ட பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.