SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer: 2017லேயே முடிய வேண்டிய கரியர்.. 8 ஆண்டுகளாக தாக்குபிடித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

2017 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஏற்பட்ட தீவிர இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சைக்கு மத்தியிலும், 8 ஆண்டுகளாகக் கடுமையான பயிற்சிகள் மூலம் தன்னை\ தகுதிப்படுத்திக்கொண்டு ரோகித் சர்மா சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Written By R Balaji
Published: Oct 27, 2026, 12:28 PM IST | Updated: Oct 27, 2026, 12:38 PM IST
Join

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா களத்தில் இறங்கினாலே சிக்சர் மழைதான். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி, ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களை வென்றுள்ளது. இவைதான் நாம் ரோகித் சர்மாவை பற்றி அறிந்தவை. ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் சந்தித்த அளவுக்கு உடற்தகுதி சார்ந்த விமர்சனங்களையும், சமூக வலைதள கேலிகளையும் இந்திய கிரிக்கெட்டில் வேறு எந்த ஒரு முன்னணி வீரரும் சமீப காலத்தில் சந்தித்திருக்க முடியாது. "ரோஹித்துக்கு ஃபிட்னஸ் இல்லை", "அவர் ஜிம்மிற்கு செல்வதில்லை" என வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பின்னால், 8 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட ஒரு பெரிய மருத்துவப் போராட்டமும், கண்ணீர்க் கதையும் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையையே 2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கும் என முன்னாள் ஃபிட்னெஸ் கோட்ச் சோஹம் தேசாய் அண்மையில் ஒரு பாட்காஸ்ட்டில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

2017ல் ரோகித் சர்மாவுக்கு என்ன நடந்தது?

2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த காலகட்டம் அது. அந்தத் தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதியின் பின்புறத்தில் தசைநார் (Hamstring) மற்றும் இடுப்புப் பகுதி தசைகளில் மிக மோசமான காயம் ஏற்பட்டது.

காயம் தீவிரம் அடைந்ததால், அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை (Surgery) செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, அவரது இடுப்புப் பகுதி தசை அமைப்புகள் முழுவதுமாக பலவீனமடைந்தன. ஒரு பேட்டருக்கு கால்களை நகர்த்துவதற்கும், சுழன்று ஷாட்களை ஆடுவதற்கும் இடுப்பு பகுதிதான் மிகவும் முக்கியம். ஆனால் ரோகித்துக்கு அந்த இடமே உடலின் மிகவும் பலவீனமான பகுதியாக மாறியது.

”எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் டைம் பாம்”

இந்த விவகாரம் குறித்து பேசிய சோஹம் தேசாய், ரோகித்தின் உடல், “எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் டைம் பாம்” (Ticking Time Bomb) என குறிப்பிட்டார். அதாவது, அறுவை சிகிச்சைக்கு பிறகு ரோகித் சர்மாவின் இடுப்பு பகுதி எந்த நேரத்திலும் மீண்டும் முறிந்துபோகும் நிலையிலேயே இருந்து வருவதாக அவர் கூறினார்.

ஒருவேளை அந்த காயம் மீண்டும் ஏற்பட்டால், அடுத்த நாளே அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையுமே முடிவுக்கு வந்துவிடும் என்ற ஆபத்தான நிலையில்தான் அவர் கடந்த 8 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

8 ஆண்டுகளாகத் தாக்குப்பிடிப்பது எப்படி?

வெளி உலகிற்கு ரோஹித் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் திரைக்குப் பின்னால் மேற்கொள்ளும் பயிற்சிகள் அசாத்தியமானவை என பயிற்சியாளர் தேசாய் குறிப்பிட்டார்.

ரோகித்தின் ’ஸ்ட்ரென்த் டிரெய்னிங்’: வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது தனது இடுப்புப் பகுதியை உறுதிப்படுத்தும் பிரத்யேக 'ஸ்ட்ரென்த் டிரெய்னிங்' (Strength Training) அமர்வுகளை ரோஹித் கட்டாயம் செய்தாக வேண்டும். ஒரு வாரம் இதைத் தவறவிட்டாலும் கூட, பழைய காயம் மீண்டும் தலைதூக்கிவிடும் அபாயம் உள்ளது.

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இந்த அச்சுறுத்தலைத் தன் முதுகில் சுமந்து கொண்டே, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஆடுவது, ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவது மற்றும் தொடர்ந்து சதங்களை விளாசுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு அபரிமிதமான மன உறுதியும் உடற்பயிற்சி ஒழுக்கமும் தேவை என சோஹம் தேசாய் பாராட்டினார்.

விமர்சகர்களுக்கு சவுக்கடி

"ஃபிட்னஸ் என்பது  சிக்ஸ் பேக் வைப்பதோ அல்லது ஒல்லியாக காட்சியளிப்பதோ மட்டுமல்ல, உடலின் பலவீனங்களையும் காயங்களையும் கையாண்டு, அணிக்காக மைதானத்தில் நின்று 100 சதவீதம் பங்களிப்பை வழங்குவதுதான் உண்மையான ஃபிட்னஸ்" என ரோகித் தான் இந்திய அணிக்கு தொடர்ந்து பங்களித்ததன் மூலம் தன் மேல் இருந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவரின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ரோகித் சர்மாவை கேலி செய்வதவர்களுக்கு, 8 ஆண்டுகளாக ஒரு மோசமான காயத்தை சமாளித்துக் கொண்டே, இந்தியாவுக்கு 4 ஐசிசி கோப்பைகள் வென்று கொடுத்து மற்றும் உலகத்தரம் வாய்ந்த பேட்டராக நிலைத்து நிற்பதே தகுந்த சவுக்கடி ஆகும்.  

2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ரோகித் சர்மா

கெளதம் கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்த பின்னர் ரோகித் சர்மா தனது டெஸ்ட் கிரியரை முடித்துக்கொண்டார். இளம் வீரர்களை கொண்டு வர பயிற்சியாளர் தரப்பில் இருந்து அவர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அறிவித்த சில நாட்களிலேயே விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றார். இதனாலேயே இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ரோகித் சர்மா விளையாடி வருகிறார். அதிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே விளையாடி வரும் அவர், தொடர்ந்து சிறப்பாக விளையாடி தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று கோப்பை தரவிட்ட நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடி வருகிறார். அதன் பின்னரே, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தெரிகிறது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES