இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு பின், இவர்கள் சேர்ந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படமும் வெளியானது. இதற்கான ப்ரமோஷன் விழாவில் இருவரும் கலந்து கொண்டதை அடுத்து, விஜய் அந்த நேர்காணலில் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலானது.
பாலிவுட்டில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது, காஃபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது பல்வேறு செலிப்ரிடிகள் வந்து பேசுவது வழக்கம். ரணபலி படத்தை ப்ரமோட் செய்யும் நோக்கில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டனர்.
அப்போது, தன்னிடம் திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒரு வருடமாக ராஷ்மிகா கேட்டதாகவும், தான் தன்னுடைய காதலை சோதிக்க விரும்பி, திருமணத்திற்கு சில காலம் எடுத்துக்கொண்டதாகவும் விஜய் தேவரகொண்டா தெரிவித்திருந்தார். இது, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
ராஷ்மிகாவை பார்த்து பலரும் “தயவு செய்து விஜய்யுடன் இருக்காதே, ஓடி விடு” என்று பலர் வீடியோவாகவும் போஸ்டாகவும் பதிவிட்டு வந்தனர். இன்னும் சிலர் விஜய் தேவரகொண்டாவை ‘ரெட் ஃப்ளேக்’ என்றும், அவர்தான் முதலில் திருமணம் செய்து கொள்ள சொல்லி ராஷ்மிகா மந்தனாவை கேட்டிருக்க வேண்டும் என்றும் பலர் கூறி வந்தனர். மறு பக்கம், இவர்கள் இருவருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தது.
ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவை ரொம்பவே காதலிப்பதாகவும், ஆனால் விஜய் அவரை கண்டு கொள்வதில்லை என்றும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்த பரும் கூறி வந்தனர்.
தன்னையும், தன் கணவரையும் பற்றி வலம் வந்த சர்ச்சைகளுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மிக நீண்ட விளக்க பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தானும் விஜய்யும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாழ்வில் பல்வேறு சங்கடங்கள் தனக்கு ஏற்பட்ட போது, தன்னுடன் இருந்தவர், விஜய்தான் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, பல நாட்களாக தங்களுக்கு தேவையற்ற கருத்து சொல்லி வருபவர்கள் குறித்தும் தன் வாழ்க்கை குறித்தும் முழுமையாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டாவை தான் ரொம்பவே காதலிப்பதாக கூறிய அவர், பலர் அவர்களுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு கதைகளை இணையத்தில் கூறி வருவதாகவும், தங்கள் காதல் உங்கள் கற்பனைக்கு எட்டவில்லை என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவும், தான் தன்னுடைய மனைவியை ரொம்பவே காதலிப்பதாகவும், பிறர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்றும் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.
தற்போது ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்கள் மேனேஜரை வைத்து சைபர் க்ரைமில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த புகாரில், “போலியான பொய்யான கதைகள், மாற்றியமைக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள், ஆன்லைன் தொல்லை மற்றும் காரணமற்ற விவாகரத்து வதந்தி பதிவுகள் என பரவி இருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். மேலும், அதற்குரிய ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்களாம்.