SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: 4 போட்டிகளில் வெறும் 30 ரன்கள்.. 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? பிசிசிஐ திட்டம் என்ன?

Rohit Sharma 2027 World Cup Chance Explained: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 4 போட்டிகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2027 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written By R Balaji
Published: Nov 17, 2026, 14:00 IST | Updated: Nov 17, 2026, 14:05 IST
Join

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ளது. தொடரை இந்திய அணி வென்றிருந்தாலும், சில வீரர்களின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி உள்ளது. குறிப்பாக ரோகித் சர்மாவின் செயல்பாடு விவாதப்பொருளாகி உள்ளது. இத்தொடரில் தொடர்ந்து ரன்களை எடுக்க தடுமாறிய அவர், 4 போட்டிகளில் வெறும் 30 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இது அவரது கடந்த கால ரெக்கார்டுகளுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. இதனால் அவர் 2027 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா? தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்வார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ரோகித் சர்மாவின் கடந்த கால செயல்பாடுகளுக்கும் தற்போதைய செயல்பாடுகளுக்குமான வித்தியாசம் என்ன? உண்மையிலேயே அவரது பேட்டிங் திறன் குறைந்துள்ளதா? முன்னாள் வீரர்கள் இது குறித்து சொல்வது என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டம்

நியூசிலாந்து - இந்தியாவுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆடுகளத்தின் தன்மை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. குறிப்பாக, இரவு நேரப் போட்டிகளில் பந்து காற்றில் ஸ்விங் ஆனதுடன், எதிர்பாராத விகையில் பந்து நகர்ந்தது. பந்தின் நன்றாக பவுன்ஸானதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது.

இந்த சூழலில், ரோகித் சர்மா ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார். அவர் விளையாடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் முறையே 0, 23, 0, 7 என்ற ரன்களை யே எடுத்தார். அவரது சராசரி வெறும் 7.50 மட்டுமே. ரோகித் சர்மா இதுவரை 296 போட்டிகளில் விளையாடி 12,150 ரன்கள் குவித்துள்ளார். இதில் 35 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 264 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 48.60 ஆக உள்ளது. 2013 ஆம் ஆண்டில் தொடக்க வீரராக களமிறங்கிய பிறகு பல்வேறு சாதனைகளை படைத்து இந்திய கேப்டனாகவும் வளம் வந்த அவருக்கு இத்தொடர் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பாக 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான தொடரில் தற்போது நியூசிலாந்து தொடரை விட மோசமாக விளையாடி இருக்கிறார். 5 போட்டிகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அத்தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டம் என்றும் ரோகித் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

ரோகித் சர்மாவின் வீக்னஸ்.. அம்பலப்படுத்திய பந்து வீச்சாளர்கள்

நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர்களுக்கே தனது விக்கெட் கொடுத்தார்.

பந்தின் நகர்வை கணிக்க முடியாமல் தடுமாறிய ரோகித் சர்மா, கால்களை நகர்த்துவதிலும் சிரமப்பட்டார். இதுவே அவர் இத்தொடரில் ரன்களை குவிக்காததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா?

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் கேப் டவுனில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியின்போது, ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும்.

சமீப காலமாகவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு உலகக் கோப்பையில் இடம் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதிலும், ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் ரன்கள் எடுக்க தவறும்போதும் இதுபோன்ற விவாதம் எழும்.

ரோகித் சர்மாவுக்கு மாற்றாக தயாராகும் இளம் வீரர்கள்?

ரோகித் சர்மாவின் ஆட்டம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், இந்திய அணியில் அவருக்கான மாற்று வீரர்கள் குறித்த விவாதமும் தொடங்கி உள்ளது, யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் கிடைத்த குறைந்த வாய்ப்புகளிலேயே சிறப்பாக விளையாடி உள்ளார். இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 71.25 சராசரியுடன் 285 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் அடங்கும்.

இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடர்ந்து தொடக்க வீரர்களாக விளையாடி வருவதால், ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ரோகித்தின் ஃபார்ம் தற்போது சரிந்து வருவதால், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கக்கூடும்.

தோனியின் நிலைதான் ரோகித்துக்கும்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் கடைசி காலகட்டம் இதற்கு ஒரு முன்னுதாரணமாக கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின்போது, தோனி ரன்கள் எடுப்பதில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிப்பதிலும் சிரம்ப்பட்டார். அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. அதேபோன்ற சூழல் ரோகித்துக்கும் ஏற்படுமா என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ரோகித்துக்கு பிசிசிஐ ஆதரவு

2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ரோகித்தை தேர்வு செய்வது குறித்து தேர்வுக்குழுவில் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், உலகக்கோப்பைக்கான திட்டமிடலில் ரோஹித்தைத் தாண்டி யோசித்ததாகவும், லார்ட்ஸ் மைதானத்தில் அவரது கடைசிப் போட்டி இந்திய அணிக்காக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், உலகக்கோப்பை வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், அணிக்கான தனது பங்களிப்பையும் ரோஹித் பிசிசிஐ நிர்வாகத்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உலகக்கோப்பை கனவுக்கு நிர்வாகம் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது பிரக்யான் ஓஜா தலைமையிலான புதிய தேர்வுக்குழு ரோஹித்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ரோஹித்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட ஓஜாவுக்கு, இந்த முடிவு சவாலானதாக இருக்கும்.

ரோகித் சர்மவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் - முன்னாள் தேர்வாளர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல், ரோகித் சர்மாவுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "ரோகித் மற்றும் விராட் போன்ற வீரர்களின் திறமை நிரந்தரமானது. ஃபார்ம் என்பது தற்காலிகமானது. ஒரு தொடரில் ரன்கள் எடுக்க முடியாமல் போவது இயல்பானது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரைவிட 2027 ஒருநாள் உலகக்கோப்பைதான் முக்கியம். ரோகித் உலகக்கோப்பையில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஆனால், இறுதி முடிவு தேர்வாளர்கள் மற்றும் ரோகித்தின் கையில்தான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகக்கோப்பைக்கு இன்னும் சுமார் ஓராண்டு இருப்பதால், அதற்குள் ரோகித் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஒரே ஒரு இன்னிங்ஸ் போது” - சந்தீப் பாட்டீல்

ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரருக்கு மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவதற்கு ஒரே ஒரு சிறப்பான இன்னிங்ஸ் போதுமானது என சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். கடந்த 2026 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் 139 ரன்கள் விளாசி இருந்தார். அதன்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் 32, 101, 92 ரன்கள் எடுத்திருந்தார். இதனை சுட்டிக்காட்டிய சந்தீப் பாட்டீல், இது போன்ற அபார திறன் கொண்ட வீரரை ஒரு மோசமான தொடரை வைத்து தீர்மானிக்கக்கூடாது என கூறினார்.

ரோகித் சர்மா தனது உடல்தகுதியை மேம்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார். இருப்பினும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் தொடர்ந்து ரன்களை குவிப்பது அவசியமாகிறது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES