SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சிஎஸ்கே-வில் இருக்க வேண்டுமா? சிவம் துபே வைத்த 2 கோரிக்கைகள்!

Chennai Super Kings Latest News: ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையில் தனது பெயரை கொண்டு வந்ததால் சிவம் துபே அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

Written By R Balaji
Published: Sep 01, 2026, 13:56 IST | Updated: Sep 01, 2026, 14:03 IST
Join

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் டிரேடிங் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில முக்கிய வீரர்களை தங்கள் அணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணிக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில், சிவம் துபே மற்றும் கலீல் அகமது ஆகியோரின் பெயர்கள் மாற்று வீரர்களாக பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷிவம் துபே அதிருப்தி

ஆனால், இந்த விவகாரத்தில் தனது பெயரை கொண்டுவந்தது சிவம் துபேவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் டிரேடிங் பேச்சுவார்த்தையில் தனது பெயர் இடம்பெற்றது குறித்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் அவர் தனது அதிருப்தியை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் தொடர்ந்து நீடிப்பது தொடர்பாக துபே சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால், தன்னை விரும்பும் வேறு அணிக்கு டிரேட் செய்து விடலாம் என்றும் அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபேவின் முக்கிய கோரிக்கை

தனது ஆல்ரவுண்டர் திறமைக்கு சிஎஸ்கே அணி போதிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையே துபே முக்கியமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்திய டி20 அணியில் சமீபகாலமாக அவருக்கு பந்துவீசும் வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணிக்காக அவர் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசியதாக சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக பந்துவீசும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்த துறையிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே துபேவின் வாதமாக இருப்பதாக தெரிகிறது.
இதனால், ஐபிஎல் 2027 சீசனில் சிஎஸ்கே அணியில் தொடர வேண்டுமென்றால், ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 2 ஓவர்கள் வீசும் வாய்ப்பு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அணியின் துணை கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும் அல்லது அனைத்து போட்டிகளிலும் இம்பாக்ட் வீரர் விதியின் கீழ் இல்லாமல், வழக்கமான வீரராக களமிறங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து விரைவில் முடிவை தெரிவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தனது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிட்டால், தன்னை விரும்பும் வேறு அணிக்கு டிரேட் செய்து விடலாம் என்றும் துபே திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

2028 டி20 உலகக் கோப்பைதான் இலக்கா?

தற்போது 33 வயதாகும் ஷிவம் துபேவின் பார்வை 2028 டி20 உலகக் கோப்பை மீதும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் அந்தத் தொடருக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் தொடர்ந்து தனது திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியம்.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 93 ஆட்டங்களில் விளையாடியுள்ள துபே, 87 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 31.31 சராசரியுடன் 2,129 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 145.40 ஆகும். இதில் 10 அரைசதங்களும் அடங்கும்.

ஆர்சிபிக்கு எதிராக அவர் அடித்த 95* ரன்களே ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதுவரை 132 பவுண்டரிகளையும், 137 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
பந்துவீச்சில் ஏன் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஆல்ரவுண்டராக அறியப்படும் துபேவுக்கு ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசும் வாய்ப்பு மட்டும் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது.
இதுவரை 19 போட்டிகளில் மட்டுமே பந்துவீசியுள்ள அவர், மொத்தமாக 25.4 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 6 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியதே ஐபிஎல்லில் அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

எனவே, பேட்டிங்கில் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துவிட்ட நிலையில், பந்துவீச்சிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் இந்திய டி20 அணியில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று துபே நம்புவதாக கூறப்படுகிறது.

இப்போது, துபே முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. பேச்சுவார்த்தை அவருக்கு சாதகமாக அமையவில்லை என்றால், ஐபிஎல் 2027 டிரேடிங் காலத்தில் ஷிவம் துபே சிஎஸ்கே அணியை விட்டு வேறு அணிக்கு செல்லும் சூழலும் உருவாகலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES