IND vs SL 1st Test, Dhurv Jurel vs Sarfaraz Khan : இந்திய அணி நீண்ட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. ஐபிஎல் முடிந்ததும் ஆப்கானிஸ்தான் உடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியிருந்தாலும், அப்போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எடுத்துக்கொள்ளப்படாது.
இந்நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மற்றும் இலங்கை முறையே 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளன. இந்திய அணிக்கு இத்தொடருக்கு பின் நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் (Away), ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் (Home) என இரண்டு தொடர்கள் உள்ளன.
இந்திய அணிக்கு அடுத்துள்ள 9 டெஸ்ட் போட்டிகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றில் ஒரு போட்டியை தோற்றாலும், WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது கடினமாகிவிடும். எனவே, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து சிறப்பான அணியை கட்டமைக்க சுப்மான் கில் - கௌதம் கம்பீர் ஜோடி திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் நம்பர் 6 இடத்தில் விளையாடப்போவது யார் என்பதே தற்போது பெரிய கேள்வியாக உள்ளது. இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பை பெற்று வரும் துருவ் ஜூரேலா அல்லது காயமடைந்த சாய் சுதர்சனுக்கு மாற்று வீரராக வந்த சர்பராஸ் கானா...?
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருந்தாலும், ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக துருவ் ஜூரேல் பார்க்கப்படுகிறார். அவர் இலங்கை ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி சார்பில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே, கம்பீர் அண்ட் கோ இவருக்கே வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் துருவ் ஜூரேலுக்கு பதில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. கேப்டன் சுப்மான் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சர்பராஸ் கானிடம் உரிய முறையில் பேச்சு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரவிசந்திரன் அஸ்வின், Ash Ki Baat என்ற அவரது ஹிந்தி யூ-ட்யூப் சேனலில் பேசியதாவது, "நான் ஜூரேலைதான் முதலில் விளையாட வைப்பேன். ஏனென்றால் சாய் சுதர்சன் காயம் காரணமாகவே, அவருக்கு பதில் சர்பராஸ் கான் அணிக்குள் வந்தார். எனவே சர்பராஸ் கானிடம் இந்திய அணி தெளிவாக சொல்லிவிட வேண்டும்.
சில சூழ்நிலைகளில் அவரது விளையாட்டின் மீது உங்களுக்கு சந்தேகம் இருப்பதாக நீங்கள் உணரும்பட்சத்தில், அவருக்கு நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். துணைக்கண்ட சூழ்நிலைகளில் அவரால் இந்திய அணிக்கு சிறப்பாக கைக்கொடுக்க முடியும் என்பதை அவரிடம் கூற வேண்டும்.
அதனால் சர்பராஸ் கான் மற்ற விஷயங்களில் தனது நேரத்தை செலவழிக்க மாட்டார். அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தலாம். இதனால் துணைக்கண்ட ஆடுகளங்களில் அவர் மன்னனாக ஆகலாம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம். சில ஆடுகளங்களில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நீங்கள் உணரும்பட்சத்தில் அதை அவரிடம் நேரடியாக தெரிவியுங்கள்" என்றார்.
சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக உரையாடல் நிகழ்வில் IANS ஊடகத்திடம் மூத்த இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டபிள்யூ.வி. ராமன் கூறுகையில், "ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டரையே தேர்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். துருவ் ஜூரேல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவரும் குறிப்பிடத்தக்க அளவில் ரன்களை சேர்க்கிறார்.
ஆனால், இளம் வீரரான சர்பராஸ் கான் கூட சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். எனவே, கிரிக்கெட்டிற்கான ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக நீங்கள் அவரை தேர்வு செய்திருந்தால், அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைப்பதையே விரும்புவேன்.
ஆனால், அவர் சுழற்பந்துவீச்சையும் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் அதிரடியான ஆட்டக்காரராக விளங்க முடியும். அவர் அணிக்கு கொண்டுவரும் மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர் பேட்டருக்கு அருகில் பீல்டிங் நின்று கேட்ச் பிடிப்பவராகவும் உள்ளார்.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை இலங்கை அணி அமைக்கும்பட்சத்தில், இந்த விஷயமும் இந்திய அணிக்கு நிச்சயம் தேவையாக இருக்கும்" என்கிறார். எனவே நம்பர் 6 இடத்தில் சர்பராஸ் கானா, துருவ் ஜூரேலா என்ற பேச்சு நாளை காலை 9.30 மணிக்கு (IST) டாஸ் போட்டு, பிளேயிங் லெவனை அறிவிக்கும்வரை நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.