18 ஆண்டுகால பயணம்! CSK-வை மாற்றிய மனிதர்... தோனியின் அசாதாரண பயணத்தின் முழு கதை!
MS Dhoni CSK Journey: 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்த எம்.எஸ். தோனி, தனது 18வது ஆண்டு ஐபிஎல் பயணத்தில் ஐந்து கோப்பைகளை வென்று அணியை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றார். "கேப்டன் கூல்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர், வீரராக இருந்து மென்டராக மாறும் நிலையில், CSK-வின் புதிய தலைமுறைக்கு வழிகாட்ட உள்ளார். அவரது தலைமையும், அமைதியான அணுகுமுறையும், அணிக்காக உருவாக்கிய வெற்றிக் கலாச்சாரமும் என்றும் நினைவில் நிற்கும்.
MS Dhoni CSK Journey: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இரு பெயர்களையும் தனித்தனியாக பார்க்க முடியாது. 2008-ல் தொடங்கிய இந்த பயணம், வெறும் கிரிக்கெட் உறவாக இல்லாமல், உணர்வு, நம்பிக்கை மற்றும் வெற்றியின் அடையாளமாக மாறியது. தற்போது 18 ஆண்டுகள் நீண்ட அந்த பொற்கால பயணம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அணியின் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் தோனி செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது CSK பயணத்தை மீண்டும் நினைவுகூரும் தருணமாக இது மாறியுள்ளது.
2008-ல் தொடங்கிய வரலாற்று உறவு
ஐபிஎல் தொடக்க ஏலத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அப்போது இந்திய அணியின் T20 உலகக்கோப்பை வெற்றிக் கேப்டனாக இருந்த தோனி, முதல் சீசனிலேயே CSK-வை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதுதான் அவரை, அடுத்த பல ஆண்டுகளுக்கான வெற்றிப் பாதையை உருவாக்கியது.
ஐந்து கோப்பைகளை வென்ற பொற்கால கேப்டன்
2010-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை தனது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 2011-ல் பட்டத்தை தக்கவைத்ததன் மூலம் சிஎஸ்கே (CSK) வலிமையான அணியாக உருவெடுத்தது. பின்னர் 2018, 2021 மற்றும் 2023 ஆண்டுகளிலும் கோப்பையை வென்று, மொத்தம் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற அணியாக சென்னை திகழ்ந்தது. இந்த சாதனையின் மையப்புள்ளியாக இருந்தவர் தோனி தான்.
"கேப்டன் கூல்" என்ற பெயருக்கு காரணம்
அழுத்தமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக முடிவெடுக்கும் திறமைதான் தோனியின் மிகப்பெரிய பலம். எதிர்பாராத அமைப்புகள், தைரியமான மாற்றங்கள் மற்றும் போட்டியின் போக்கை புரிந்துகொண்டு எடுத்த முடிவுகள் பலமுறை CSK-வுக்கு வெற்றியைத் தேடித்தந்தன. இதன் காரணமாகவே அவர் "கேப்டன் கூல்" என்ற பட்டத்தை ரசிகர்களிடமிருந்து பெற்றார்.
சவால்களையும் கடந்து திரும்பிய சென்னை அணி
2016 மற்றும் 2017 சீசன்களில் சிஎஸ்கே இடைநீக்கத்தை சந்தித்தபோது, அணியின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. அந்தத் தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணிக்காக விளையாடினாலும், சென்னை ரசிகர்களுடனான அவரது தொடர்பு எந்த நிலையிலும் குறையவில்லை. 2018-ல் மீண்டும் களமிறங்கிய CSK, அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் கோப்பையை வென்று மிகப்பெரிய வெறிக்கான கதையை எழுதியது. அது தொடரவும் செய்தது.
ரசிகர்களின் மனதில் நிற்கும் 2023 வெற்றி
முழங்கால் பிரச்சினையால் உடல்நிலை சவால்களை எதிர்கொண்ட போதிலும், 2023 சீசனில் தோனி அணியை வெற்றிப்பாதையில் நடத்தினார். குஜராத் டைட்டன்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்ற சென்னை, ஐந்தாவது கோப்பையை கைப்பற்றியது. ரவீந்திர ஜடேஜாவை அணைத்துக் கொண்ட தோனியின் தருணம், CSK ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் காட்சியாக மாறியது.
கோப்பைகளை விட அணியை கட்டமைத்தார் தோனி
தோனி வெறும் வெற்றிகளை மட்டுமே கொடுக்கவில்லை. அவர் ஒரு கிரிக்கெட் கலாச்சாரத்தை உருவாக்கினார். அனுபவம், பொறுப்பு, அணிச் செயல்பாடு மற்றும் நம்பிக்கை ஆகிய கொள்கைகளை கொண்டு அணியை கட்டமைத்தார். சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ட்வெய்ன் பிராவோ, ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற வீரர்கள் அவரது வழிகாட்டுதலில் சிறப்பாக ஜொலித்தனர்.
சேப்பாக்கமும் தோனியும் பிரிக்க முடியாத உறவு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒலிக்கும் "தோனி... தோனி.." என்ற முழக்கங்கள், ரசிகர்களுக்கும் தோனிக்கும் இடையேயான அபூர்வமான பந்தத்தை வெளிப்படுத்துகின்றன.
புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் புதிய பொறுப்பு
2024-ல் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, தலைமுறை மாற்றத்திற்கு வழிவகுத்தார். பின்னர் காயம் காரணமாக மீண்டும் தலைமையேற்றாலும், அவரது எதிர்காலம் குறித்து பல விவாதங்கள் தொடர்ந்தன. 2026 சீசனில் கால் தசை காயம் காரணமாக அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
இப்போது அணியின் மென்டராக புதிய பொறுப்பை ஏற்கும் நிலையில், தோனியின் அனுபவமும் அறிவும் CSK-வின் அடுத்த தலைமுறையை உருவாக்க முக்கிய பங்கேற்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி இல்லாத CSK-வை நினைக்க முடியுமா?
ஒரு நாள் எம்.எஸ். தோனி போட்டி கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகலாம். ஆனால் அவர் உருவாக்கிய அமைதி, விசுவாசம், அணிச் சிந்தனை மற்றும் வெற்றிக் கலாச்சாரம் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளமாக தொடரும். வீரராக அவரது பயணம் முடிந்தாலும், சிஎஸ்கே வரலாற்றில் தோனியின் பெயர் அழியாத அத்தியாயமாகவே இருக்கும்.
மேலும் படிக்க - ரிட்டையர் ஆன தோனி! சிஎஸ்கே அணிக்கு மிச்சமான ரூ.4 கோடி