நடராஜன் சொதப்பியும் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி... மதுரை அணிக்கு 2வது தோல்வி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், எந்த அணி பிளே ஆப் செல்லும் என்பது இன்னும் இழுபறியில் உள்ளது.
TNPL 2026, MP vs ITT Highlights: 10வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்றது. மதிய நேர போட்டியாக நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சாய் கிஷோ் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றதை தொடர்ந்து துஷார் ரஹேஜா கேப்டன்ஸியை கவனித்து கொண்டார். இசக்கிமுத்து இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
மதுரை சுமாரான தொடக்கம்
மதுரை பேந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் முடிவில் 157 ரன்களை எடுத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி பவர்பிளே முடிவிலேயே 3 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. பவர்பிளே ஓவரில் மதுரை 45 ரன்களை மட்டுமே அடித்தது.
திருப்பூர் அணியை பொறுத்தவரை சிலம்பரசன் 2 ஓவர்களை வீசி 3 ரன்களை மட்டும் கொடுத்தார், விக்கெட் எடுக்கவில்லை. நடராஜன் பவர்பிளேவில் 24 ரன்களை கொடுத்தாலும் 1 விக்கெட்டை எடுத்தார். 6வது ஓவரை வீசிய அறிமுக வீரர் மோகன் பிரசாத், TNPL தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். மதுரை அணி கேப்டன் அனிருத் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து, 7வது ஓவரில் ஓபனர் ராம் குமார் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மதிவண்ணன் வீசிய 11வது ஓவரில் ஹரி ராகேவந்திரா மற்றும் ஷோயப் ஆகியோர் அடுத்து ஆட்டமிழந்தனர். 13வது ஓவரில் சரவணன் விக்கெட்டை மதிவண்ணன் எடுத்தார், முகமது அலி லாங் ஆன் பவுண்டரி லைனில் நூலிழையில் நின்று அந்த கேட்சை பிடித்து அசத்தினார். இதனால் 12.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு மதுரை 77 ரன்களில்தான் இருந்தது.
மிரட்டிய 8வது விக்கெட் ஜோடி
8வது விக்கெட்டுக்கு பார்டனர்ஷிப் அமைத்த ரோஹன் புத்ரா - அதிக் உர் ரஹ்மாந் ஜோடி சிறப்பாக விளையாடி மதுரை அணியை மீட்டது. இந்த ஜோடி சுழற்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்தது. நடராஜனையும் கடைசியில் விட்டுவைக்கவில்லை. சிறப்பாக பந்துவீசிய சிலம்பரசன் தசை பிடிப்பு காரணமாக மேற்கொண்டு ஓவர்களை வீசவில்லை. இதனால் டெத் ஓவர்களையும் இடது கை ஸ்பின்னர் மோகன் பிரசாத் பார்த்துக்கொண்டார்.
ரோஹன் புத்ரா - அதிக் உர் ரஹ்மான் ஜோடி 41 பந்துகளில் 73 ரன்களை சேர்த்தது. கடைசியில் இருவருமே ஆட்டமிழக்க, மதுரை அணி 157 ரன்களை குவித்தது. ரோஹின் புத்ரா - அதிக் உர் ரஹ்மான் ஜோடிதான் காப்பாற்றியது உறுதியாக சொல்லலாம். திருப்பூர் அணியில் அதிகபட்சமாக அதிக் உர் ரஹ்மான் 43 (30)(4x4 - 6x1), ரோஹன் புத்ரா 36(22) (6x4) ரன்களை குவித்தனர்.
நடராஜன் சொதப்பல்
திருப்பூர் பந்துவீச்சில் மதிவண்ணன் 3 விக்கெட்டையும்; நடராஜன், மோகன் பிரசாத் தலா 2 விக்கெட்டையும்; பிரணவ் ராகேவந்திரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நடராஜன் 4 ஓவர்களில் 2 விக்கெட் வீழ்த்தினாலும் 48 ரன்களை வாரி வழங்கினார். இந்த போட்டியில் அவரே அதிக எகானமியில் பந்துவீசியவர் எனலாம்.
மதுரையின் பவர்புள் பந்துவீச்சு
158 ரன்கள் என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கியது. அதிரடி ஓபனிங்கிற்கு பெயர் பெற்ற அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா ஜோடி இன்றும் அதே துணிச்சலுடன் களமிரங்கியது. ஆனால், குர்ஜப்னீத் சிங் வீசிய 3வது ஓவரில் அமித் சாத்விக் 14(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் வாஃபர் 1 ரன்னில் தீபேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தீபேஷ் ஒருமுனையில் வேகத்தை கூட்டி குறைத்து அசத்தலாக பந்துவீசினார்.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்
இதனால் முதல் 4 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 5வது ஓவரை ரோஹன் புத்ரா வீசினார. அந்த ஓவரில் ரஹேஜா அவரை வெளுத்தெடுத்தார். 2வது பந்தை தவிர்த்து அனைத்து பந்துகளிலும் சிக்ஸரை பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் 30 ரன்கள் அடிக்கப்பட்டது.
பவர்பிளே கடைசி ஓவரை பெரியசாமி வீசினார். அந்த ஓவரில் பிரதோஷ் ரஞ்சன் பால் 3 பவுண்டரிகளை விளாச மொத்தம் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளே முடிவில் திருப்பூர் 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை குவித்தது. அதாவது, 2 ஓவரில் மட்டும் 45 ரன்கள் அடிக்கப்பட்டது.
திடீரென சரிந்த திருப்பூர்
14 ஓவரில் 69 ரன்களே தேவை என்ற நிலையில், திருப்பூர் தில்லாக இருந்தது. அப்போது வந்தார் சோயப் முகமது கான். ஆப்-ஸ்பின்னரான இவர் இம்பாக்ட் வீரராக வந்து பேட்டிங்கில் மிரட்டியிருந்தார். பந்துவீச்சிலும் மிரட்டினார். அவரது முதல் பந்திலேயே ரஹேஜா ஆட்டமிழந்தார். ரஹேஜா வெறும் 17 பந்துகளில் 7 சிக்ஸர்களை மட்டும் அடித்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர், சோயப் வீசிய 9வது ஓவரில் முகமது அலி 3, சசிதேவ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால், திருப்பூர் அணி சட்டென்று 91 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து நின்றது.
கரையேற்றி பிரதோஷ் ரஞ்சன் பால்
பிரதோஷ் ரஞ்சன் பால் நிலைத்து நின்று விளையாடி திருப்பூர் அணியை கரை சேர்த்தார். இம்பாக்ட் வீரராக வந்த கணேஷ் 18 பந்துகளில் ஒரே ஒரு சிக்ஸரை மட்டும் அடித்து 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஒருமுனையில் விக்கெட்டை விடாமல் சுமார் 6 ஓவர்களுக்கு தாக்குபிடித்ததன் காரணமாகவே திருப்பூர் அணியால் மீண்டு வர முடிந்தது.
ஆட்டநாயகன் பிரதோஷ்
17.4 ஓவர்களில் திருப்பூர் வெற்றிக் கனியை பறித்தது. பிரதோஷ் ரஞ்சன் 45 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 65 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மதிவண்ணன் 7 பந்துகளில் 6 ரன்களை அடித்திருந்தார். மதுரை பந்துவீச்சில் சோயப் மட்டும் 4 விக்கெட்டை வீழ்த்தினார். தீபேஷ் மற்றும் குர்ஜப்னீத் சிங் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பிரதோஷ் ரஞ்சன் பால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பிளே ஆப் போகப்போவது யார் யார்...?
திருப்பூர் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் டாப்புக்கு போய்விட்டது. திருப்பூர், மதுரை, திருச்சி அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே முதலிடத்தில் உள்ளனர். கோவை, சென்னை, நெல்லை அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 4வது முதல் 6வது இடத்தில் உள்ளனர். திண்டுக்கல் அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், சேலம் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.
இதன்மூலம், எந்த அணி பிளே ஆப் செல்லும் என்பது இன்னும் இழுபறியில் உள்ளது. அனைத்து அணிகளும் தங்களின் 6வது போட்டியை விளையாடிவிட்டன. சேலம் - நெல்லை அணிகள் தற்போது இரவு போட்டியில் விளையாடி வருகின்றனர், இது அவர்களின் 6வது போட்டி. அனைத்து அணிகளுக்கும் இன்னும் 1 போட்டியே இருக்கிறது. லீக் போட்டி சனிக்கிழமை வரை நடைபெறும் என்பதால் அன்றுதான் யார் யார் பிளே ஆப் செல்வார்கள் என்பது உறுதியாகும்.