விராட் கோலி வெறியாட்டம்... ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட்... இந்திய அணி வெற்றி
India vs New Zealand 1st ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 37வது பிறந்தநாளை நாளை (நவ. 5) விராட் கோலி கொண்டாட இருக்கும் நிலையில், இன்று 74 ரன்களை அதிரடியாக குவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
India vs New Zealand 1st ODI: இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நிறைவடைந்தது, அதை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் இன்று (நவ. 4) முதல் தொடங்குகிறது.
ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் முதல் ஓடிஐ போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்திய அணி பிளேயிங் லெவனில் பிரீமியம் ஸ்பின்னர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், வேகப்பந்துவீச்சாளர்களில் சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டது.
குல்தீப் யாதவ் இல்லை
அர்ஷ்தீப் சிங், அன்சுல் கம்போஜ், குர்னூர் பிரர், ஆகிப் நபி ஆகிய நால்வரும் விளையாடினார்கள். நம்பர் 7 வரை மட்டுமே பேட்டர்கள் இடம்பெற்றனர். அன்சுல் கம்போஜ், ஆகிப் நபி ஆகியோர் ஓரளவு பேட்டிங்கில் பங்களிப்பார்கள் எனலாம். ஸ்பின்னர்களாக அக்சர் படேல் (இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர்), நமன் திர் (வலது கை ஆஃப் ஸ்பின்னர்) ஆகியோர் இடம்பெற்றனர்.
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என வழக்கமான டாப் ஆர்டர் இன்றும் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலந்து அணி முதல் 10 ஓவர்களில் 45 ரன்களை எடுத்து 2 விக்கெட்டை இழந்தது. அர்ஷ்தீப் சிங் அந்த 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
185 ரன்களுக்கு ஆல்-அவுட்
அடுத்த 20 ஓவர்களில், அதாவது 30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 124 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அன்சுல் கம்போஜ் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். குர்னூர் பிரரும் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 40.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிம் சைஃபர்ட் 38, டேரில் மிட்செல் 28, கிளென் பிலிப்ஸ் 30 ரன்களையே எடுத்தனர்.
இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட், குர்னூர் பிரர் 3 விக்கெட், அன்சுல் கம்போஜ் 2 விக்கெட்டை எடுத்தனர். இதில் அன்சுல் கம்போஜ் 10 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்களை விசி 22 ரன்களை மட்டும் கொடுத்தார். அதுவும் முதல் ஸ்பெல்லில் (5 ஓவர்கள்) 1 மெய்டன் ஓவர் உள்பட 12 ரன்களை கொடுத்தார். அடுத்த ஸ்பெல்லில் (5 ஓவர்கள்) 1 மெய்டன் ஓவர் உள்பட 10 ரன்களை மட்டும் கொடுத்தார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!
இரண்டு முறை குறுக்கிட்ட மழை
இந்திய அணி 186 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் அடிக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் சுப்மான் கில்லுடன் இணைந்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
10.5 ஓவர்களில் இந்திய அணி 54/1 என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. அடுத்து ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இலக்கு 167 ஆக மாற்றப்பட்டது. அடுத்து 12வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டது. சற்று நேரத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. ஓவர்கள் 32 ஆக குறைக்கப்பட்டு, இலக்கு 143 ஆக மாற்றப்பட்டது. 20 ஓவர்களுக்கு இந்திய அணி 89 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட் கோலி - சுப்மான் கில் களமிறங்கினர்.
விராட் கோலியின் 2வது அதிவேக அரைசதம்
விராட் கோலி பவுண்டரி அடித்து 35வது பந்தில் அரைசதம் கடந்தார். வெளிநாட்டில் விராட் கோலி அடித்த 2வது வேகமான அரைசதம் இதுதான். இதற்கு முன் 2016இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேன்பராவில் நடந்த ஓடிஐ போட்டியில் 34 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அதே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.
சுப்மான் கில் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 51 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்ஸர் 74 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இது விராட் கோலியின் 80வது ஓடிஐ அரைசதமாகும். அடுத்து வந்த அக்சர் பட்டேல் டக்அவுட்டான நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். நமன் திர் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார்.
அன்சுல் கம்போஜ் ஆட்டநாயகன்
22.4 ஓவர்களில் இலக்கை அடைந்த இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டையும், கைல் ஜேமீசன் மற்றும் நாதன் ஸ்மித் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக அன்சுல் கம்போஜ் தேர்வு செய்யப்பட்டார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் 2வது போட்டி
நவம்பர் 7ஆம் தேதி (சனி) அன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி வெல்லிங்டன் நகரில் நடைபெறும். 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?