தீபாவளி மற்றும் சட் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு இந்த ஆண்டு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதாரணமாக ₹10,000 முதல் ₹11,000 வரை கிடைக்கும் டெல்லி-கொல்கத்தா விமான டிக்கெட், தன்தேரஸ் நாளில் ₹78,694 வரை உயர்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, கடும் பயணிகள் தேவை மற்றும் டைனமிக் பிரைசிங் முறை ஆகியவை இந்த உயர்வுக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், விமான நிறுவனங்கள் அளவுக்கு மீறிய கட்டணத்தை வசூலிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண்டிகை காலங்களில் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகின்றனர். குறிப்பாக ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், விமானங்களின் மீதான தேவை திடீரென அதிகரிக்கிறது.
விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் "டைனமிக் பிரைசிங்" முறையில், ஆரம்பத்தில் சில இருக்கைகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. அவை விரைவாக நிரம்பியதும் மீதமுள்ள இருக்கைகளின் விலை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் பல மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விமான நிறுவனங்கள் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வை முக்கிய காரணமாகக் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் ATF விலை சுமார் 13% உயர்ந்துள்ளது.
ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் மற்றும் பயணிகள் அமைப்புகள், எரிபொருள் விலை உயர்வு மட்டுமே 200% முதல் 700% வரையிலான கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது என வாதிடுகின்றன. உண்மையில் அதிகப்படியான தேவையும் சந்தை சார்ந்த விலை நிர்ணய முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பண்டிகைக்கால விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு (Fare Cap) விதிக்க தற்போதைக்கு திட்டமில்லை என்று தெரிவித்துள்ளது. இதுக்குறித்து அரசின் தரப்பில், "எரிபொருள் விலை அடிக்கடி மாறுகிறது. சந்தை நிலையைப் பொறுத்து கட்டணத்தை நிர்ணயிக்க விமான நிறுவனங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் சேவைகள் குறைய வாய்ப்பு உள்ளது என விளக்கம் அளித்துள்ளது. மேலும் அதிக கூட்டம் உள்ள வழித்தடங்களில் கட்டணங்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு பிரிவு செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் விமான கட்டணங்கள் 700% வரை உயர்ந்திருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுத்துள்ளது. விசாரணையின் போது நீதிபதி, "கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தால் விமானப் பயணத்தை தவிர்க்கலாம்" என்று கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 16 அன்று நடைபெற உள்ளது.
'இந்திய விமான விதிகள் 2026' என்ற புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.
1. கட்டண விவரங்கள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்
2. நிரந்தர கட்டண உச்சவரம்பு இல்லை
3. அவசர சூழ்நிலைகளில் அரசு தலையிடலாம்