ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு ஏன் தூணாக விளங்குகிறார்...? சிவம் தூபே, நிதிஷ் குமார் ரெட்டி உடன் ஹர்திக் பாண்டியாவின் ஒப்பீடு...? இதுசார்ந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் இங்கு விரிவாக அலசலாம்.
ஹர்திக் பாண்டியாதான் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு பேசுப் பொருளாக இருக்கப்போகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேட் செய்ய வாய்ப்புள்ளதாகவும், மூன்று அணிகள் அவரை பெற பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஹர்திக் பாண்டியா மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தாலும் கூட அவருக்கான மவுஸ் ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்பது நிதர்சனம். ஐபிஎல் அரங்கில் மட்டுமின்றி இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியாவுக்கான தேவை அதிகமிருக்கிறது.
2017-2018 காலகட்டத்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தொடர் காயங்கள் காரணமாகவும், உடற்தகுதி சிக்கல் காரணமாகவும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
ஆனால், அதன் பின்னர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்திய ஹர்திக் பாண்டியா, ஒரு தவிர்க்க முடியாத வீரராக உயர்ந்து நிற்கிறார். ஏன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்...? அவருக்கு பதில் ஒரு மாற்று வீரரை கண்டறிவதில் என்ன சிக்கல்...? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம்
டி20ஐ: ஹர்திக் பாண்டியா கடைசியாக விளையாடிய டி20ஐ போட்டி என்பது 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிதான். ஐபிஎல் போட்டிக்கு பின்னர் அவர் சர்வேதச கிரிக்கெட்டுக்கு திரும்பவே இல்லை.
2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்கு பின் இந்திய டி20ஐ அணியில் ஹர்திக் பாண்டியாவின் தாக்கம் இதோ:
- ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் இருந்து 38 டி20ஐ போட்டிகளில் விளையாடி 32இல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் இல்லாமல் 33 டி20ஐ போட்டிகளில் விளையாடி இந்திய அணி 18 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஓடிஐ: ஹர்திக் பாண்டியா கடைசியாக விளையாடிய ஓடிஐ போட்டி என்றால், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிதான். அதாவது, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் அவர் ஓடிஐ போட்டியில் விளையாடவில்லை. ஓடிஐ விளையாடி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் தேர்வான நிலையில், மீண்டும் காயத்தில் சிக்கியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. டிசம்பர் மாதம் நடைபெறும் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடருக்குள் அவர் உடற்தகுதி பெறுவார் என நம்பப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்கு பின் இந்திய ஓடிஐ அணியில் ஹர்திக் பாண்டியாவின் தாக்கம் இதோ:
- ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் இருந்து 8 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 8இல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் இல்லாமல் 21 ஓடிஐ போட்டிகளில் விளையாடி இந்திய அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
டி20ஐ மற்றும் ஓடிஐ போட்டிகளில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா எந்தளவிற்கு சமநிலையை அளிக்கிறார் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் மூலமமே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர்கள்
ஹர்திக் பாண்டியாவை போல் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் சொற்பமானவர்கள் இருந்தாலும், அவரை போல தாக்கம் செலுத்தக் கூடியவர்களை இந்தியா இன்னும் கண்டறியவில்லை.
சிவம் தூபே, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக வலம் வருகின்றனர். ஆனால், தூபே டி20ஐ-ல் நான்கு ஓவர்களை முழுமையாக வீசியது மிக சொற்பமானவைதான். நிதிஷ் குமார் ரெட்டியும் ஓடிஐ-ல் 10 ஓவர்களை பெரிதாக வீசியதில்லை.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு அக்சர் படேல்.. MI - DC இடையே டிரேட் டீல்? முழு விவரம்
இருவரும் ஹர்திக் பாண்டியாவை போல் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பங்காற்றியது மிகக் குறைவாகவே ஆகும். அதன் புள்ளிவிவரங்கள்:
டி20ஐ புள்ளிவிவரங்கள்
| வீரர்கள் | போட்டிகள் | ரன்கள் | விக்கெட்டுகள் (எகானமி) |
| ஹர்திக் பாண்டியா | 138 | 2288 | 114 (8.34) |
| சிவம் தூபே | 82 | 1178 | 40 (9.96) |
| நிதிஷ் குமார் ரெட்டி | 9 | 153 | 10 (9.04) |
ஓடிஐ புள்ளிவிவரங்கள்
| வீரர்கள் | போட்டிகள் | ரன்கள் | விக்கெட்டுகள் (எகானமி) |
| ஹர்திக் பாண்டியா | 94 | 1904 | 91 (5.60) |
| சிவம் தூபே | 6 | 43 | 3 (5.53) |
| நிதிஷ் குமார் ரெட்டி | 8 | 109 | 3 (7.40) |
இவர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகராக இந்திய அணிக்கு பங்களிக்கவில்லை என்பதையும் இந்த புள்ளிவிவரங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக சூர்யான்ஷ் ஷெக்டே தற்போது இந்திய அணியில் கவனம் பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் ஹைலைட்ஸ்
- ஹர்திக்கின் அதிவேக பந்துவீச்சு: தூபே சராசரியாக மணிக்கு 125 கி.மீ, வேகத்திலும், நிதிஷ் குமார் மணிக்கு 130 கி.மீ, வேகத்திலும் பந்துவீசுபவர்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா மணிக்கு 135 - 140 கி.மீ., வேகத்திலும் பந்துவீசுவார். ஹர்திக் தனது வேகமான பந்துவீச்சால் எகானமியை கட்டுக்குள் வைததிருப்பார்.
- கேப்டன்களின் நம்பிக்கை: எகானியாக வீசுவது ஒருபுறம் 4 ஓவர்களை வீசி அதிக டாட் பந்துகளையும், விக்கெட்டையும் எடுக்கும் திறன் பெற்றவர் ஹர்திக் பாண்டியா. ஆனால், சிவம் தூபே மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் 4 ஓவர்களை முழுமையாக வீசுவது அரிது. ஹர்திக் பாண்டியா விளையாடினால் கூடுதல் பேட்டரையோ அல்லது ஸ்பின்னரையோ இந்திய அணி பயன்படுத்திக்கொள்ளலாம்.
- அனைத்து கட்டத்திலும் பந்துவீசுவது: தூபேவும், நிதிஷ் குமாரும் மிடில் ஓவர்களில் மட்டும்தான் பந்துவீசுவார்கள். டி20ஐ, ஓடிஐ இரண்டிலும் புதிய பந்தை கையில் எடுத்து வித்தைக்காட்டுவார், ஹர்திக் பாண்டியா. இதுவும் கூடுதல் பலம். டெத் ஓவர்களிலும் சிறப்பாக யார்க்கர் வீசும் திறன் கொண்டவர். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிளாசென், மில்லரை ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாம்பியன்ஷிப்பை பெற அவரது டெத் ஓவர்களும் ஒரு காரணமாக அமைந்தது.
- அதிரடியும் அனுபவமும் நிறைந்த பேட்டிங்: இவர் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு அதிரடியாக ரன்களை அடித்துக் கொடுப்பதில் வல்லவர். டி20ஐ மற்றும் ஓடிஐயில் கடைசி கட்டத்தில் விறுவிறுவென ரன்களை எடுக்கும் அனுபவம் ஹர்திக் பாண்டியாவுக்கு அதிகம். ஆசியாவை தாண்டி சிவம் தூபேவுக்கும், நிதிஷ் குமார் ரெட்டிக்கும் அனுபவம் குறைவு.
முடிவுரை
ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருக்கிறார் என்பதை இங்கு விரிவாக புள்ளிவிவரங்களுடன் கண்டோம். அவருக்கான மாற்று வீரர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை என்பதையும் இங்கு பார்த்தோம்.
2027ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியா அணி சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஹர்திக் பாண்டியா தேவை. ஹர்திக் பாண்டியா இல்லாவிட்டால் 2023 உலகக் கோப்பை நிலைதான் ஏற்படும். எனவே அவர் உடற்தகுதி பெற்று இந்திய ஓடிஐ ஸ்குவாடுக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.