SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஒரு Test Match 5 நாட்கள் ஏன் நடக்கிறது? 90 ஓவர்கள் முதல் 2 இன்னிங்ஸ் வரை.. சுவாரஸ்ய பின்னணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஏன் 5 நாட்கள் நடைபெறுகின்றன? ஒரு நாளில் 90 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னணி என்ன? இரு அணிகளுக்கும் தலா 2 இன்னிங்ஸ் வழங்கப்படுவது ஏன்? டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யமான விதிகள் மற்றும் வரலாற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 19, 2026, 20:35 IST | Updated: Aug 19, 2026, 20:38 IST
Image Credit: Image Source: X
Join

டி20, டி10 என கிரிக்கெட் உலகம் மின்னல் வேகத்திற்கு மாறிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், டெஸ்ட் போட்டிகள் 5 முழு நாட்கள் விளையாடப்பட்டு வருகின்றன. வெறும் 3 மணி நேரத்தில் முடிவடையும் போட்டிகளைப் பார்த்து பழகிய இன்றைய தலைமுறைக்கு, 'டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் ஏன் 5 நாட்கள் நீடிக்கிறது?' என்ற கேள்வி எழுவது இயல்புதான். 450 ஓவர்கள், 40 விக்கெட்டுகள் மற்றும் நாள் வாரியாக மாறும் ஆடுகளத்தின் விந்தை என, டெஸ்ட் கிரிக்கெட்டின் இந்த 5 நாள் வடிவத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறும் சுவாரஸ்யமான காரணங்களும் ஒளிந்துள்ளன. அது என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில், போட்டிகளுக்கு குறிப்பிட்ட நாள் வரம்பு எதுவும் கிடையாது. ஒரு அணி மற்றொன்றை முழுமையாக வீழ்த்தும் வரை போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு 'டைம்லெஸ் டெஸ்ட்' என்று பெயர்.

10 நாட்கள் நடந்த டெஸ்ட் போட்டி

1939 ஆம் ஆண்டு இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டி தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் நீடித்தது. முடிவில் இங்கிலாந்து அணி தங்களது சொந்த நாட்டிற்கு கப்பலை பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் போட்டி டிராவில் முடிக்கப்பட்டது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்க்கவும், போட்டிகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்கவும் பிற்காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன் பின்னர் 5 நாள் வடிவமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலையான வடிவமாக மாறியது.

ஒரு நாளைக்கு ஏன் 90 ஓவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் 5 நாட்கள் நடக்கிறது என்பதற்காக வீரர்கள் நாள் முழுவதும் விளையாடுவதில்லை. சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு பொதுவாக 90 ஓவர்கள் வீச வேண்டும் என்ற இலக்கு உள்ளது. இதன்படி, 5 நாட்களில் சுமார் 450 ஓவர்கள் வரை ஒரு போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், வீரர்களுக்கு மதிய உணவு, தேநீர் இடைவேளை (Tea Break, Lunch Break) வழங்கப்படுகின்றன. மேலும், விளையாடும் நாட்களில் மழை பெய்தால் 90 ஓவர்கள் வீச முடியாமல் போகலாம். காரணம், போட்டியின் நேரமும் முடிவு செய்திருப்பதால்தான்.

இரு அணிகளுக்கும் ஏன் தலா 2 இன்னிங்ஸ்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கும் தலா 2 இன்னிங்ஸ் வழங்கப்படுவதற்கு முக்கிய காரணம், ஒரு அணியின் முழுமையான திறமையை சோதிப்பதுதான். ஒரு அணி முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்களை எடுத்தாலும், அதற்குப் பிறகு பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்யலாம். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும்.

உதாரணமாக, ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும், எதிரணி 400 ரன்களும் எடுத்ததாக வைத்துக்கொள்வோம். இதனால் முதல் அணியின் தோல்வி உறுதியாகிவிடாது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்து, எதிரணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கலாம். அதன்பிறகு பந்துவீச்சாளர்கள் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினால், முதல் இன்னிங்ஸில் பின்தங்கியிருந்த அணியே வெற்றி பெற முடியும்.

இதன் மூலம் பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீச்சு, பொறுமை, உடல் தகுதி மற்றும் போட்டியை திட்டமிட்டு விளையாடும் திறன் என ஒரு அணியின் அனைத்து திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.

5 நாட்கள் முடிந்தும் போட்டி முடியாவிட்டால்?

டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள் விளையாடிய பிறகும் ஒரு அணி வெற்றி பெறவில்லை என்றால், அந்தப் போட்டி 'டிரா' என அறிவிக்கப்படும். அதாவது, 5 நாட்களுக்குள் ஒரு அணியால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தேவையான ரன்களை எடுத்து வெற்றி பெற முடியவில்லை என்றால், போட்டிக்கு வெற்றி தோல்வி இல்லாமல் முடிவு கிடைக்கும்.

இங்குதான் டெஸ்ட் கிரிக்கெட் மற்ற வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்துகிறது. ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு வெறும் அதிக ரன்கள் எடுத்தால் மட்டும் போதாது. எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.

நாள் செல்ல செல்ல மாறும் ஆடுகளம்

டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் வழங்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஆடுகளத்தின் தன்மையும் ஆகும். போட்டி நடைபெறும் நாட்கள் செல்ல செல்ல பிட்சின் தன்மை மாறும். ஆரம்ப நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம், போட்டியின் பிற்பகுதியில் பந்துவீச்சாளர்களுக்கு உதவலாம்.

இதனால் முதல் நாளில் சிறப்பாக பேட்டிங் செய்வது, மூன்றாவது அல்லது நான்காவது நாளில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, ஐந்தாவது நாளில் வெற்றிக்காக போராடுவது என போட்டியின் ஒவ்வொரு நாளும் புதிய சவாலை உருவாக்குகிறது.

இதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் வெறும் ரன்கள் மற்றும் விக்கெட்டுகளின் போட்டியாக இல்லாமல், வீரர்களின் பொறுமை, உடல் தகுதி, மன வலிமை மற்றும் உத்தியை சோதிக்கும் மிக நீண்ட கிரிக்கெட் வடிவமாக பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES