Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் மாற்றத்திற்கு ஆளாகி வருகிறது. அடுத்த மெகா ஏலம் 2028 சீசனுக்குதான் என்றாலும் இப்போதே சிஎஸ்கே தற்போது அந்த மாற்றத்தை செய்யத் தொடங்கிவிட்டது.
கடந்த சீசனில் சஞ்சு சாம்சனை டிரேடிங் மூலம் அணிக்குள் கொண்டுவந்த சிஎஸ்கே, அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அந்த மாற்றத்திற்கு வித்திட்டது. 18 ஆண்டுகளாக தலைமைப் பயிற்சியாளராக இருந்து, கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்த ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார்.
தற்போது தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்து பல்வேறு மாற்றங்கள் அணியில் வர இருக்கின்றன. பந்துவீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மா தேர்வாகலாம் என தகவல்கள் வருகின்றன. பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக் ஹசியும் தற்போது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்த எரிக் சிம்மன்ஸ், பீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பாஸ்டர் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு பணியாற்ற இருக்கின்றனர். இங்கிலாந்து வீரரான வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக பிளமிங் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கும் இங்கிலாந்து அணி பக்கம் சென்றிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
2024 சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனிலும் கேப்டனாக தொடர்வாரா அல்லது பயிற்சியாளர் ஜாகீர் கான் சஞ்சு சாம்சன் பக்கம் செல்வாரா என்பதும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ருதுராஜ் கெய்க்வாட் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்ஸியிலும் தொடர்ந்து சொதப்பி வருவது கவனிக்கத்தக்கது.
இந்தச் சூழலில், சிஎஸ்கே அணி எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் எம்எஸ் தோனியின் பங்கு இருக்கும் நிலையில் அவர், 2027 சீசனில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வகையில், சென்னையில் நிகழ்வு ஒன்றில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், 45 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா...? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், "இந்த கேள்வியை நானும் அவரிடம் (தோனியிடம்) தான் கேட்க வேண்டும். அவர் இன்னும் அணியில் ஒரு வீரராகவே தொடர்ந்து நீடிப்பதால், அவர் களமிறங்கி விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார். இதன்மூலம் தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்பதை காசி விஸ்வநாதன் சூசமாக சொல்கிறார் என கூறி இணையத்தில் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.