உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற இந்திய அணியின் கனவுக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது. வெல்ல வேண்டிய போட்டியை டிரா செய்ததால் இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் குறைந்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள போட்டிகளில் மட்டுமல்லாமல் மற்ற அணிகளின் முடிவுகளையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்தியாவின் PCT 51.52 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் அதே நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேளியா 69.23 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும். நியூசிலாந்து அணி 66.67 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 50 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
WTC இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே மோதும் என்பதால் இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய அணிக்கு தற்போது 6 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால் இந்திய அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதாவது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
அப்படி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இந்தியாவின் PCT 66.67 சதவீதமாக மட்டுமே உயரும். இது ஆஸ்திரேலியாவின் தற்போதைய PCT-ஐ விடக் குறைவு என்பதால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளும் இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான மற்ற அணிகளின் சில முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளும் எஞ்சியுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு போட்டியும், இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளும் மீதமுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்துக்கு எதிராக 4 போட்டிகளும், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளும் உள்ளன. நியூசிலாந்துக்கு இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள், இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் 7 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், இனிவரும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள ஒரு டெஸ்டில் வெற்றி பெறுவதுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் முடிவுகளும் இந்தியாவின் தகுதி வாய்ப்பை தீர்மானிக்கும். எனவே, இந்திய அணி தனது ஆட்டத்தில் வெற்றிகளை பதிவு செய்வதுடன், மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும். இந்த கடினமான கணக்குகளை இந்திய அணியால் சாத்தியமாக்க முடியுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.