உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அகிய நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தகக்வைக்க முடியும். அதே நேரத்தில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பாதுகாத்துக்கொள்ளலாமே தவிர உறுதியாகாது என்ற சூழலே உள்ளது. அப்படியானால், 2027 உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற என்ன செய்ய வேண்டும்.
WTC தொடரில் அணிகளின் வெற்றி, தோல்வி மற்றும் டிரா அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு அணியின் மொத்த புள்ளிகளை விட அந்த அணி வெற புள்ளிகளின் சதவீதம் அடிப்படையிலேயே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 71.43 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி 69.23 சதவீதத்துடனும், இந்தியா 51.52 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன. இதனால் இந்திய அணி முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
WTC இறுதிப்போட்டிக்கான தகுதி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்கள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன. குறிப்பாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 19) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இத்தொடர் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதுதவிர நியூசிலாந்து அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இதன்படி இந்தியாவுக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகளும், நியூசிலாந்துக்கு 10 போட்டிகளும், ஆஸ்திரேலியாவுக்கு 9 போட்டிகளும், தென்னாப்பிரிக்காவுக்கு 7 போட்டிகளும் எஞ்சியுள்ளன.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதுவரை இந்த WTC சுழற்சியில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே, எஞ்சியுள்ள 7 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதலில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகிவிடாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவுகளும் முக்கியம். மேலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளும் இந்தியாவின் தகுதி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்திய அணியின் தற்போதைய நிலைமை மிகவும் சவாலானது. நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் என 7ல் வென்றாலும் இறுதி போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகாது. காரணம், இதற்கு முன்பாக அவர்கள் சந்தித்த தோல்வியே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் ஒன்றாலாவது இந்திய அணி வென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டிலும் தோற்றது. அதேபோல், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தது. அதில் ஒன்றில் வென்றிருக்கலாம். 4 தோல்விகளில் இந்தியா 2 தோல்விகளை தவிர்த்திருந்தால், தற்போதைய சூழல் பெருமளவு சாதகமாக இருந்திருக்கும்.
தற்போது, இந்தியா தனது எஞ்சிய போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களது எஞ்சிய போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இந்தியாவை விட முன்னிலையில் இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல், இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-2 என்ற கணக்கிலும் தொடரைக் கைப்பற்றினாலும் சில சூழல்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடியாமல் போகலாம்.
இதனால் இந்திய அணி தனது வெற்றிகளை மட்டும் நம்பியிருக்காமல், மற்ற அணிகளின் முடிவுகளையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்புக்கு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முக்கியமானதாக இருக்கும். இந்த தொடர் டிராவானால் இரு அணிகளும் அதிகப்படியான புள்ளிகளை பெறுவதை தவிர்க்க முடியும். இது இந்திய அணியின் தகுதி வாய்ப்புக்கு சாதகமாக அமையக்கூடும்.
மேலும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தங்களது எஞ்சிய போட்டிகளில் தோல்விகளை சந்திப்பதும் இந்தியாவுக்கு உதவும். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய அணிகள் நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறுவது இந்தியாவின் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
தற்போது நான்காவது இடத்தில் இருந்தாலும் இந்திய அணியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடிக்க முடியும். அதற்கு எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறுவதுடன், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் புள்ளிகளை இழக்க வேண்டும்.
எனவே, WTC 2025-27 தொடரின் இறுதிக்கட்டத்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணி தனது வெற்றிகளை உறுதி செய்வதுடன், மற்ற போட்டிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும்.