SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

CSK Latest News: கடந்த மூன்று ஆண்டுகளாக சொதப்பி வரும் சிஎஸ்கே அணியை மீண்டும் சாம்பியனாக்க அந்த அணியின் பயிற்சியாளர் ஜாகீர் கான் மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அது குறித்த் இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Oct 12, 2026, 12:41 PM IST | Updated: Oct 12, 2026, 12:45 PM IST
Join

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களாக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தடுமாறி வருகிறது. 2023ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சிஎஸ்கே, 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தையும், 2026 சீசனில் 8வது இடத்தியும் பிடித்தது. இதனால் 2027 ஐபிஎல் தொடரில் மீண்டும் வலுவாக களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

இந்த சூழலில், சிஎஸ்கே அணியில் பயிற்சி குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 18 ஆண்டுகளாக அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளெமிங் அந்த பொறுப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சிம்மன்ஸுக்கு பதிலாக மொஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸியும் அணியில் இருந்து விலகி உள்ளதால், சிஎஸ்கேவின் பயிற்சி கட்டமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் சிஎஸ்கே அணிக்கு புதிய அணுகுமுறையை வழங்குமா? இளம் வீரர்களின் வளர்ச்சிக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல்பாட்டுக்கும் ஜாகீர் கான் எந்த வகையில் உதவ முடியும்? 2027 சீசனுக்கு முன்னதாக சென்னை அணியின் கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

1. டெத் ஓவர்களில் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும்

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றி, கடைசி 5 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அமையும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விலையாடும் இந்த கட்டத்தில் ரன்களை கட்சிப்படுத்துவதுடன், முக்கியமான விக்கெட்களையும் கைப்பற்ற வேண்டியது அவசியம்.

2026 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி இந்த விஷயத்தில் சிக்கலை சந்தித்தது. தொடரின் ஆரம்பகட்டத்தில் டெத் ஓவர்களில் வீசப்பட்ட முதல் 40 பந்துகளில் 11 ரன்களை அந்த அணி விட்டுக்கொடுத்தது. ஒவருக்கு 16.55 ரன்கள் என்ற அளவில் ரன்கள் வழங்கியிருந்தது. இது அந்த காலகட்டதில் தொடரிலேயே மோசமான புள்ளிவிவரமாக இருந்தது.

பின்னர் சிஎஸ்கேவின் டெத் ஓவர் பந்துவீச்சில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இந்த பகுதியில் மேலும் சீரான செயல்பாடு தேவைப்படுகிறது. குறிப்பாக கடைசி ஓவர்களில் யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவது வேகத்தை குறைத்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வது, பந்து வீச்சில் உத்திகளை பயன்படுத்துவது முக்கியமானவை.

இந்த இடத்தில்தான் ஜாகீர் கானின் அனுபவம் சிஎஸ்கேவுக்கு பயனளிக்கும். இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடிய அவர், அழுத்தமான சூழல்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அன்ஷுல் கம்போஜ் குர்ஜப்நீத் சிங் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் வழிகாட்ட முடியும்.

வீரர்களின் பந்துவீச்சு திறனை மேம்படுத்துவதுடன், எதிரணி பேட்ஸ்மேன்களின் பலவீனங்களுக்கு ஏற்ப பீல்டிங் அமைப்புகளை மாற்றுவது. போட்டியின் சூழலுக்கு ஏற்ற பந்துவீச்சு திட்டங்களை வகுப்பது போன்றவற்றிலும் ஜாகீர் கவனம் செலுத்தலாம். இதன் ம்மூலம் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிஎஸ்கேவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும்.

2. இளம் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

சிஎஸ்கே அணி நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இளம் வீரர்களை தேர்வு செய்து வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா போன்ற வீரர்கள் இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக உள்ளனர்.

இளம் வீரர்களை அணியில் சேர்ப்பது மட்டுமே போதாது. அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு. சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு தயார்படுத்துவதும் முக்கியம். குறிப்பாக, ஐபிஎல் போன்ற அழுத்தம் நிறைந்த தொடரில் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு சரியான வழிகாட்டுதல் அவசியமாகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிக்கெட் செயல்பாடுகள் இயக்குநராகவும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சி குழுவில் வழிகாடியாகவும் பணியாற்றிய அனுபவம் ஜாகீர் கானுக்கு உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை கண்டறிவது. அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது போன்ற பணிகளில் அவருடைய அனுபவம் சிஎஸ்கேவுக்கு உதவக்கூடும். மேலும், ஸ்டீபன் ஃபிளெமிங், மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் இல்லாத சூழலில், பயிற்சி குழுவின் புதிய செயல்பாட்டு முறையை உருவாக்க வேண்டிய நிலையும் அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஜாகீர் கான், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி ஆகியோரின் அனுபவங்களை ஒருங்கிணைத்து இளம் வீரர்களை வளர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும்.

2026 ஐபிஎல் தொடரில் தோனி ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. 2027 சீசனில் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியாத நிலையில், வீரராக களமிறங்காவிட்டாலும் அணியின் திட்டமிடல் மற்றும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளில் அவருடைய பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பது கவனிக்க வேண்டியதாகும்.

2011 ஒருநாள் உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் ஜாகீர் கானுக்கு உள்ளது. இந்த அனுபவப் பின்னணி, அணியின் எதிர்கால திட்டங்களை உருவாக்குவதில் இருவருக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக்கு உதவக்கூடும்.

3. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சுமையை குறைக்க வேண்டும்

ஐபிஎல் போன்ற தொடரில் கேப்டனின் பொறுப்பு என்பது டாஸ் வெல்வது, பேட்டிங் வரிசையை தீர்மானிப்பது போன்றவற்றுடன் முடிந்துவிடுவதில்லை. போட்டியின் போக்கை மதிப்பிட்டு, சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றுவது, பீல்டிங் அமைப்பை சரிசெய்வது, எதிரணியின் அதிரடியை கட்டுப்படுத்துவது எனப்பல முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டியிருக்கும்.

இந்த சூழலில், தலைமை பயிற்சியாளரின் ஆலோசனை கேப்டனுக்கு முக்கியமான ஆதரவாக அமையும். குறிப்பாக, பந்துவீச்சு தொடர்பான முடிவுகள் மற்றும் ஆட்டத்தின் நடுவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களில் ஜாகீர் கானின் அனுபவம் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உதவக்கூடும்.

சிஎஸ்கே அணியின் கடந்த இரண்டு சீசன்களின் செயல்பாடு, அணியின் ஒட்டுமொத்த திட்டமிடலில் மாற்றங்கள் தேவைப்படுவதை உணர்த்தியுள்ளது. 2025 10வது இடத்தையும் 2026ல் 8வது இடத்தையும் பிடித்ததால், மீண்டும் கம்பேக் கொடுப்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

அதற்காக, அணியில் உள்ள வீரர்களின் திறனுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்குவது, போட்டிக்கு முன்பும் போட்டியின்போதும் தெளிவான திட்டங்களை வகுப்பது, வீரர்களிடையே நம்பிக்கையை உருவாக்குவது போன்ற பணிகளில் பயிற்சிக் குழு கவன்ம் செலுத்த வேண்டிருக்கும். ஜாகீர் கானின் வருகை, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் பணிக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக அமையலாம்.

இருப்பினும், பயிற்சியாளரின் அனுபவம் மட்டுமே அணியின் வெற்றியை தீர்மானிக்காது. வீரர்களின் உடற்தகுதி, களத்தில் அவர்களின் செயல்பாடு அணித் தேர்வு மற்றும் போட்டிக்கு ஏற்ற உத்திகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவது ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கும்.

பயிற்சி குழுவை அமைப்பதே முதல் சவால்

ஜாகீர் கானுக்கு முன்னால் இருக்கும் பணி, பந்துவீச்சாளர்களையும் இளம் வீரகளையும் மேம்படுத்துவதுடன் முடிந்துவிடவில்லை. நீண்டகாலமாக அணியுடன் இணைந்து செயல்பட்ட முக்கிய பயிற்சியாளர்கள் விலகியுள்ளதால், மீதமுள்ள பயிற்சி குழுவை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.

பேட்டிங் பயிற்சி, பந்துவீச்சுப் பயிற்சி, ஃபீல்டிங் பயிற்சி உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுக்கும் பொருத்தமான பொறுப்பாளர்களை நியமித்து, அனைவரும் ஒரே திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் வீரர்களின் தனிப்பட்ட திறமைகளையும் அணியின் ஒட்டுமொத்த தேவைகளையும் ஒருங்கிணைக்க முடியும்.

மொத்தத்தில், ஐபிஎல் 2027 தொடரில் சிஎஸ்கே அணியின் மறுகட்டமைப்பில் ஜாகீர் கான் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். டெத் ஓவர் பந்துவீச்சைச் சீரமைப்பது, இளம் இந்திய வீரர்களை வளர்ப்பது, கேப்டன் ருதுராஜுக்கு ஆதரவளிப்பது ஆகிய மூன்று அம்சங்களும் அவரது பயிற்சிப் பணியின் முக்கிய பகுதிகளாக இருக்கும்.

ஆனால், 2023க்குப் பிறகு மீண்டும் கோப்பையை வெல்லும் இலக்கை அடைய, சிஎஸ்கே அணி தனது பலவீனங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்வதுடன், புதிய பயிற்சி குழுவின் செயல்திட்டங்களை களத்திலும் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். ஜாகீர் கானின் வருகை இந்த மாற்றத்திற்கான தொடக்கமாக அமையுமா என்பதை 2027 ஐபிஎல் சீசனின் செயல்பாடுகளே தீர்மானிக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES