100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு குட் நியூஸ்! 150 நாட்களாக உயர்வு
தமிழ்நாடு அரசு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. 'வெற்றி 150' (VETRI 150 Scheme) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட விளிம்புநிலைக் குடும்பங்களுக்கு (Vulnerable Households) முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது.
திட்டத்தின் பின்னணியும் புதிய மாற்றமும்
இந்திய அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு மாற்றாக, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'விக்சித் பாரத் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம்' (VB-G RAM G Act, 2025) கடந்த 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டு, அதற்கான நிதி 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், கிராமப்புற ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் 125 வேலை நாட்களை முழுமையாக நிறைவு செய்யும் தகுதியுடைய விளிம்புநிலைக் குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சொந்த நிதிப் பங்களிப்பின் மூலம் கூடுதலாக 25 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி, ஒட்டுமொத்த வேலை நாட்களை 150 ஆக உயர்த்த உத்தரவிடப்பட்டது.
ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 151-ன் படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டிலிருந்து (Revised Budget Estimate) ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை 'VETRI 150 Wages' என்ற பிரத்யேக கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் 25 நாட்கள் வேலை பெற தகுதியானவர்கள் யார்?
மத்திய அரசின் திட்டத்தில் 125 நாட்களை நிறைவு செய்த பின்னர், மீதமுள்ள கூடுதல் 25 நாட்கள் வேலை பெற பின்வரும் விளிம்புநிலைக் குடும்பங்கள் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:
1. பெண்கள் குடும்பத் தலைவராக உள்ள வீடுகள்.
2. ஆதரவற்ற மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள்.
3. மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள்.
4. பட்டியலினக் குடும்பங்கள்.
5. பழங்குடியினக் குடும்பங்கள்.
6. வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் பயன்பெறும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகள்.
கவனத்தை ஈர்த்த பெயர் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கொள்கை மற்றும் தேர்தல் நிலைப்பாட்டு ஆவணத்தில், "கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு, உரிய வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்தச் சூழலில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் இத்திட்டத்திற்கு வெற்றி 150 எனப் பெயரிடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் விளிம்புநிலை எளிய மக்களின் வருவாயைப் பெருக்கவும் இந்த உத்தரவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.