SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை Explained

10th Public Exam 2026: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுத்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 14, 2026, 02:04 PM IST | Updated: Oct 14, 2026, 02:09 PM IST
Join

10th Public Exam 2026: தமிழகத்தில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து, பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்குநர் திருமதி க. சசிகலா வெளியிட்டுள்ள விரிவான சுற்றறிக்கையில், பெயர்ப் பட்டியல் தயாரிப்பு, பிழை திருத்தங்கள், பெற்றோர் உறுதிமொழிப் படிவம், தேர்வுக் கட்டணம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் தொடர்பான பல முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. இச்செயல்முறைகள் அனைத்தும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகக் கவனமாகப் பின்பற்ற வேண்டியவை ஆகும்.  

1. கால அவகாச நீட்டிப்பும் இறுதி வாய்ப்பும்

முன்னதாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை, எமிஸ் இணையதளத்தில் சரிபார்த்துத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 23.09.2026 முதல் 07.10.2026 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், சில பள்ளிகள் இப்பணியை குறித்த காலத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யாத காரணத்தினால், அக்டோபர் 12 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.  

அதன் தொடர்ச்சியாக, தற்போது இறுதிப் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகளை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் முடிக்குமாறு தேர்வுத்துறை காலக்கெடு விதித்துள்ளது.  

2. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறைகள்

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்குப் பின்வரும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்:  

உள்நுழைவு: தலைமை ஆசிரியர்கள் [https://dgeapp.tnschools.gov.in](https://dgeapp.tnschools.gov.in) என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code (User ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.  

Data Pull Request: திரையில் தோன்றும் 'Data Pull Request' என்ற தெரிவை கிளிக் செய்து, பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை எமிஸ் (EMIS) அமைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  

விவரங்கள் சரிபார்ப்பு: அதன்பின்பு, 'Exam list' என்ற பக்கத்திற்குச் சென்று, ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே உள்ள 'Apply' என்பதைக் கிளிக் செய்து, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களும் திரையில் உள்ள விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதைத் தனித்தனியாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.  

தமிழ்ப் பெயர்களில் திருத்தம்: மாணாக்கரின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் தமிழில் ஏதேனும் எழுத்துப் பிழைகள் இருந்தால், ஏற்கெனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கம் செய்த பின்னரே சரியான பெயரை மீண்டும் உள்ளீடு செய்து திருத்தம் செய்ய வேண்டும்.  

3. சரிபார்க்க வேண்டிய முக்கியத் தகவல்கள்

* மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறக்கூடிய விவரங்கள் என்பதால் கீழ்க்கண்ட குறிப்புகள் பிழையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்:   
* மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்).   
* பிறந்த தேதி மற்றும் பாலினம்.   
* அண்மையில் எடுக்கப்பட்ட மாணவரின் புகைப்படம் (JPEG / JPG வடிவம்).   
* இனம்/சமூக வகைப்பாடு (Community) மற்றும் மதம்.   
* பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்).   
* பயிற்று மொழி மற்றும் விருப்ப மொழிப்பாடம்.   
* மாற்றுத்திறனாளி விவரங்கள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் சலுகைகள்.   
* கைபேசி எண், வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம்.  

4. துறைரீதியான நடவடிக்கை எச்சரிக்கை

விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட மாணவரின் விவரங்கள் அடங்கிய 'உறுதிமொழிப் படிவத்தை' (Declaration Form) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  

அச்சிடப்பட்ட படிவத்தில் உள்ள பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை மாணவரிடம் காண்பித்து உறுதிப்படுத்த வேண்டும்.  

அதில் மாணவர் மற்றும் பெற்றோரின் கையொப்பத்தை ஆசிரியர்கள் கட்டாயம் பெற வேண்டும்.  

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் அனைத்து விவரங்களையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து தங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.  

முக்கிய எச்சரிக்கை: பெயர்ப் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். இதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்வுத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

5. தேர்வுக் கட்டண விவரங்கள் மற்றும் கட்டண விலக்கு யாருக்கு?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கட்டண விவரங்கள் அரசாணையின்படி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:   
தேர்வுக் கட்டணம்: ரூ.100   
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம்: ரூ.10   
சேவைக் கட்டணம்: ரூ.5   
மொத்தக் கட்டணம் (ஒரு மாணவருக்கு): ரூ.115

யாருக்கெல்லாம் கட்டண விலக்கு உண்டு?

தமிழ் வழி மாணவர்கள்: அரசு, அரசு உதவிபெறும் அல்லது எந்தவொரு பள்ளியாக இருந்தாலும், தமிழ் வழியில் (Tamil Medium) பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்: ஆங்கில வழியில் படித்தாலும் ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC / DNC) ஆகிய பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட (BC / BCM) பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டண விலக்கு உண்டு.  

மாற்றுத்திறனாளிகள்: குறிப்பிட்ட வகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு.

தனியார் பள்ளி மாணவர்கள்: தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் பிற அனைத்துத் தகுதியுள்ள மாணவர்களும் உரிய ரூ.115 கட்டணத்தை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் செலுத்த வேண்டும்.  

6. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வில் சலுகைகள் பெற விரும்பினால், இணையதளத்தில் அவர்களின் குறைபாட்டின் தன்மை மற்றும் கோரப்படும் சலுகைகளைத் துல்லியமாகப் பதிவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது தகுதிவாய்ந்த அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இணையத்தில் பதிவு செய்தால் மட்டும் போதாது : அந்த விண்ணப்பப் படிவங்களை உரிய மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு மையங்களில் சலுகைகள் அனுமதிக்கப்படும். கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  

7. பள்ளிகள் செலுத்த வேண்டிய TML கட்டணம்

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை இணையவழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக ரூ.300 TML கட்டணத்தை [https://dgeapp.tnschools.gov.in](https://dgeapp.tnschools.gov.in) என்ற தளத்தின் மூலம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவேற்றம் மற்றும் கட்டணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் ரூ.115 கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் SC, ST, MBC பிரிவு மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட வருமான வரம்பிற்குட்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. சுயநிதி / மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே இக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.  

மாணவர் பெயர் அல்லது பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை இருந்தால் தேர்வு எழுத முடியாதா?

அப்படி எதுவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. பெயர்ப் பட்டியலில் தவறுகள் ஏதும் நேர்ந்தால், அதற்குத் தலைமை ஆசிரியரும் வகுப்பாசிரியருமே பொறுப்பேற்க வேண்டும்; அவர்கள் மீதே துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றுதான் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட மாட்டாது. இருப்பினும், மதிப்பெண் சான்றிதழில் பிழையின்றி பெயர் வர வேண்டும் என்பதால் முன்னெச்சரிக்கையாகச் சரிபார்ப்பது அவசியம்.  

பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி நாள் எது?

அக்டோபர் 14 முதல் அக்டோபர் 31 வரை பள்ளிகள் இணையதளம் வாயிலாக மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.  

பெற்றோர் உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிடுவது ஏன் கட்டாயம்?

எமிஸ் (EMIS) தளத்தில் உள்ள மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர் ஆகியவை பிழையின்றி உள்ளதா என்பதைப் பெற்றோரும் மாணவரும் நேரில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இப்பபடிவம் அச்சிடப்பட்டு கையொப்பம் பெறப்படுகிறது.  

பள்ளிகள் செலுத்த வேண்டிய TML கட்டணம் ரூ.300 என்றால் என்ன?

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பள்ளி மாணவர்களின் விரிவான மதிப்பெண் பட்டியலை (Tabulated Mark List - TML) இணையவழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, ஒவ்வொரு பள்ளியும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். இதனை அக்டோபர் 31-க்குள் இணையவழியாகச் செலுத்த வேண்டும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES