உருவாகும் அக்வான் புயல்.. நாளை இரவு முதல் தீவிரமாகும் மழை.. வெதர்மேன் அலர்ட்
Akvan Cyclone Latest Update: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்திற்கு புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Akvan Cyclone Latest Update: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று 'அக்வான்' புயல் உருவாக கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
தீவிர புயலாக மாறும் அக்வான்
அக்வான் புயல் குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 16, 2026) காலை 05:30 மணி நிலவரப்படி, இது அதே பகுதியில், அதாவது 11.0 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இது திரிகோணமலையிலிருந்து (இலங்கை) கிழக்கு-வடகிழக்கே சுமார் 630 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) மேற்கே 680 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 720 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 820 கி.மீ தொலைவிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) தெற்கே 940 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 16 மாலை வேளையில், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் இது தீவிரமடைந்து 'சூறாவளி புயலாக' (Cyclonic Storm) மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 17 மாலை வேளையில், மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் இது மேலும் தீவிரமடைந்து 'கடுமையான சூறாவளி புயலாக' (Severe Cyclonic Storm) மாற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. சிறுமிகளை அழைத்துச் சென்ற ஓட்டுநர் பெருமாள் கைது!
அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19 இரவு வாக்கில், ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில் உள்ள மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியை 'மிகத் தீவிரமான சூறாவளி புயலாக' (Very Severe Cyclonic Storm) வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் அலர்ட்
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில், "தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெறுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், அதனைத் தொடர்ந்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து, அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாகவும் அதனைத் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாகவும் மாறக்கூடும்.
எண்ணூர் முதல் கடலூர் வரையிலான பகுதிகளில், நாளை இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்கக்கூடும். நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும் இடம் மற்றும் நேரம் மாறவில்லை. இது நவம்பர் 19-ஆம் தேதி இரவு அல்லது நவம்பர் 20-ஆம் தேதி அதிகாலை வேளையில், எண்ணூர் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும்.
அக்வான் புயலால் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மழை, நவம்பர் 17-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது. வட கடலோரப் பகுதிகளைப் பொறுத்தவரை, நவம்பர் 18 முதல் 20 வரையிலான தேதிகள் மிக முக்கியமானவை. இந்த நாட்களில் அதிகம் மழை பெய்யும்" என கூறினார்.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17ஆம் தேதியான நாளை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
மேலும் படிக்க: Akvan Cyclone: தமிழகத்தை நெருங்கும் அக்வான் புயல்? எங்கு கரையை கடக்கும்?