SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அக்வான் புயல்.. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Tamil Nadu Weather Latest Update: வங்கக்கடலில் உருவாகும் புயல் நவம்பர் 20 ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க உள்ள நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Written By R Balaji
Published: Nov 16, 2026, 14:52 IST | Updated: Nov 16, 2026, 14:56 IST
Join

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20-ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்கவுள்ளது. இதன் காரணமாக, வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், நேற்று (15-11-2026) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 1130 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை (16-11-2026) 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் 17-11-2026 மாலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலவக்கூடும்.

இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளக் கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. 

இன்று மற்றும் நாளை (நவம்பர் 16, 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!  

நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

20-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

21-11-2026 மற்றும் 22-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

இன்று (நவம்பர் 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (நவம்பர் 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES