SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புது வீடு கட்டுபவர்கள் இனி இதை செய்யாவிட்டால் சிக்கல்! அரசின் புதிய விதிமுறைகள் Explained

Tamil Nadu Government New House Rules 2026: புது வீடு கட்டுபவர்கள் மழை நீரை சேகரிக்க தேவையான கட்டமைப்புகளை அமைப்பது குறித்த புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 03, 2026, 07:21 AM IST | Updated: Nov 03, 2026, 07:29 AM IST
Join

Tamil Nadu Government New House Rules 2026: தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், எதிர்கால நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் நிலையான நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதிதாக அமைத்தல், பழைய கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் முறையாக பராமரித்தல் ஆகியவற்றுக்கான புதிய விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை எண் 193 [G.O.(Ms)No.193] அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

திட்டத்தின் பின்னணியும் நோக்கமும்

கடந்த 21.10.2026 அன்று மழைநீர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வெறும் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், அதை முழுமையான களச் செயல்பாடாக மாற்றும் நோக்கில் ஒரு சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB), நகராட்சி நிர்வாக இயக்ககம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD Board) ஆகியவற்றின் உயர் அதிகாரிகளைக் கொண்ட இந்த நிபுணர் குழு விரிவான வழிகாட்டுதல் வரைவை சமர்ப்பித்தது. அதனை கவனமாக பரிசீலித்த அரசு, மாநிலம் முழுவதும் இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.  

1000 சதுர அடியில் 68,000 லிட்டர் மழைநீர் சேகரிப்பு

தமிழகத்தின் சராசரி வருடாந்திர மழையளவு 971 மி.மீ என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதில் 70% நீரை சேமிக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, சராசரியாக 100 சதுர மீட்டர் (சுமார் 1,000 சதுர அடி) பரப்பளவு கொண்ட ஒரு மொட்டை மாடியில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு சுமார் 68,000 லிட்டர் மழைநீரை திறம்பட சேகரித்து பூமிக்குள் செலுத்தவோ அல்லது சேமித்து பயன்படுத்தவோ முடியும் என இந்த வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மண்ணின் தன்மைக்கேற்ப புதிய கட்டமைப்பு முறைகள்

வெறும் சம்பிரதாயத்திற்காக தொட்டி கட்டுவதை தவிர்த்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அறிவியல் ரீதியாக மழைநீரை பூமிக்குள் செலுத்த பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன:

மணல் மற்றும் செம்மண் பகுதிகள்:

ஊற்றுக் குழிகள்: கட்டிடத்தைச் சுற்றி குறைந்தபட்சம் 0.6 மீ x 1 மீ x 1 மீ அளவில் குழிகள் அமைத்து, அதில் ஜல்லி மற்றும் மணல் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு 250 சதுர அடி கூரை பரப்பளவிற்கும் ஒரு குழி அமைக்கப்பட வேண்டும்.

ஊற்றுக் கிணறுகள்: 1,000 சதுர அடி கூரை பரப்பளவு கொண்ட வீட்டிற்கு 1 மீட்டர் விட்டம் மற்றும் 3 முதல் 5 மீட்டர் ஆழம் கொண்ட RCC வளையங்களால் ஆன ஒரு ஊற்றுக் கிணறு போதுமானது.

ஊற்று அகழிகள்: 1 மீ அகலம், 1.5 மீ ஆழம் மற்றும் 5 முதல் 10 மீ நீளம் கொண்ட அகழிகள் அமைக்கலாம்.

வடிகட்டி பட்டைகள்: திறந்தவெளி வளாகங்களில் 0.6 மீ x 1 மீ x 1.5 மீ அளவில் அமைத்து நீர் வடிந்து பூமிக்குள் இறங்க வழிவகை செய்ய வேண்டும். வீட்டைச் சுற்றி முழுமையாக கான்கிரீட் தளம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஊடுருவும் பேவர்கள்: மழைநீர் எளிதாக தரைக்குள் இறங்கும் வகையில் புல் வளரக்கூடிய இடைவெளிகள் கொண்ட கற்கள் பதிக்கப்பட வேண்டும்.

களிமண் பகுதிகள்:

களிமண் நீர் எளிதில் இறங்காத தன்மை கொண்டது என்பதால், ஊற்றுக் குழிகள் அல்லது அகழிகளில் 150 மி.மீ விட்டத்தில் 3 முதல் 10 மீட்டர் ஆழம் வரை மணல் அடுக்கு வரும் வரை துளையிட்டு (Borehole), அதில் ஜல்லி கற்களை நிரப்பி ஆழ்துளை மூலம் நீரை பூமிக்குள் கொண்டு செல்ல வேண்டும்.

பழைய கிணறுகளை புதுப்பித்தல்:

கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளில் 0.5 மீ x 0.75 மீ x 1 மீ அளவுள்ள வடிகட்டி அறையை அமைத்து மாடி நீரை பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தலாம்.

திறந்தவெளி கிணறுகளை தூர்வாரி, தூய்மைப்படுத்தி, குளோரினேஷன் செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றலாம்.

வீடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய முறை

மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை குழாய்கள் மூலம் கீழ்நோக்கி கொண்டு வர வேண்டும். முதல் 15 முதல் 20 நிமிடங்களில் பெய்யும் தூசு படிந்த முதல் மழைநீரை வெளியேற்ற தனி அமைப்பு இருக்க வேண்டும். அதன்பின்னர் வரும் சுத்தமான மழைநீரை மணல், ஜல்லி மற்றும் கரித்துண்டு வடிகட்டிகள் வழியாக கீழ்நிலை சேமிப்புத் தொட்டிக்கு (Sump) கொண்டு சென்று பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம். சேமிப்பு தொட்டி நிரம்பிய பின் வழியும் உபரி நீரை கிணறு அல்லது நிலத்தடி ஊற்றுக் கட்டமைப்புகளுக்கு திருப்பி விட வேண்டும்.

யாருக்கு இந்த உத்தரவு பொருந்தும்?

இந்த அரசாணை தலைமைச் செயலக அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், குடிநீர் வாரியங்கள், பேரூராட்சிகள் இயக்குநர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  

2019-ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி அனைத்து புதிய கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதையும், ஏற்கனவே உள்ள அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டு செயல்படுவதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES