SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விட்டால் ரூ.5 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

Chennai Corporation Warning: மழைநீர் வடிகாலில் சட்டவிரோத கழிவுநீர் விட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் என்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் அபராத விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Nov 04, 2026, 09:15 AM IST | Updated: Nov 04, 2026, 09:30 AM IST
Join

Chennai Corporation Warning: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்காக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இருப்பினும், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்களிலிருந்து சட்டவிரோதமாக இந்த வடிகால்களில் விடப்படும் கழிவுநீர் இணைப்புகள் பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, மழைக்காலங்களில் மழைநீரின் தடையற்ற ஓட்டத்தைத் தடுக்கின்றன. மேலும், வடிகால் அமைப்பின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையும் செயல்திறனையும் இது பெருமளவில் சீர்குலைத்து, சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதக் கழிவுநீர் இணைப்புகளை ஏற்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு: ரூ.100-க்கு 10 காய்கறிகள் விற்பனை – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

மழைநீர் வடிகால்களில் உள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை முழுமையாக அகற்றும் நோக்கில், மாநகராட்சி ஆணையர் விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய (CMWSSB) அதிகாரிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வின் மூலம் மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் சட்டவிரோத இணைப்புகளைக் கண்டறிந்து, அவற்றை அடைத்துத் துண்டிக்கவும், அதற்குப் பொறுப்பான நபர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக ஒரு கூட்டுக் கணக்குப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். இதில் கழிவுநீர் வெளியேற்றப்படும் இடங்கள், கட்டட உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களின் விவரங்கள், ஆய்வுக் கண்டுபிடிப்புகள், துண்டிக்கப்பட்ட சட்டவிரோத இணைப்புகளின் விவரங்கள் மற்றும் விதிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைகள் ஆகியவை முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், கழிவுநீர் அகற்றலுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் சட்டப்பூர்வ கழிவுநீர் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டட உரிமையாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும், எந்தச் சூழ்நிலையிலும் மழைநீர் வடிகால் அமைப்புகளைக் கழிவுநீர் அகற்றுவதற்காகப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின்படி, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் மற்றும் தெருக்களில் கழிவுநீரை வெளியேற்றும் விதிமீறல்களுக்கு தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் கீழ்க்கண்டவாறு அபராதம் விதிக்கப்படும்:  

சாதாரண கட்டடங்கள்: குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ. 10,000 மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.  

சிறப்புக் கட்டடங்கள்: குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ. 50,000 மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு ரூ. 1,00,000 அபராதம் விதிக்கப்படும்.  

பல் அடுக்கு மாடிக் கட்டடங்கள்: குடியிருப்பு கட்டடங்களுக்கு ரூ. 2,00,000 மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு ரூ. 5,00,000 அபராதம் விதிக்கப்படும்.  

இந்த நடவடிக்கைகளைச் செவ்வனே ஒருங்கிணைக்க, ஒவ்வொரு மண்டல அலுவலரும் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு இடையேயான பணிகளை ஒருங்கிணைக்கவும், மாநகராட்சி ஆணையருக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும், சட்டவிரோத இணைப்புகளை அகற்றுவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவும் வேண்டும். அத்துடன், விதிமீறல்களுக்காக வசூலிக்கப்படும் அனைத்து அபராத விவரங்களையும் உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் செயலியான ‘GCC App’-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சியின் செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES