தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained
சென்னை தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் அமைச்சர்கள் அறைகளில் திடீர் மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதை இங்கு விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சில பகுதிகளில் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களிலும் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் பலர் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் மின் தடை ஏற்படுவதன் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வந்தன.
உதாரணத்திற்கு, சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, 10 நிமிடங்களுக்கும் மேலாக மின்சாரம் வராததால், அங்கிருந்த பணியாளர்கள் டார்ச் விளக்குகளின் வெளிச்சத்தைப் பயன்படுத்தினர்.
தலைமைச் செயலகத்திலேயே பவர்கட்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 12) காலை மின்வெட்டு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் அறை உள்ள முதல் தளம் முழுவதும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.
அதிலும் குறிப்பாக, காலை 10 மணிமுதல் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ரஞ்சித் குமார், வெங்கட்ரமணன், சி.டி.ஆர். நிர்மல் குமார் அறை உள்பட அனைத்தும் அமைச்சர்களின் அறைகளும் இருளில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மின்வெட்டு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இன்றைய நிகழ்வு தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை கிளப்பின.
தமிழ்நாடு அரசின் எழுந்த விமர்சனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை என்றும்; மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அன்புமணி வைத்த குற்றச்சாட்டு
கவலையளிக்கும் மின்வெட்டு: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின.
இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள மின்வெட்டு தமிழ்நாடு அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.
நிலைமை மோசமடைந்துவிட்டது: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
மின்வெட்டுக்கான காரணம்: தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவது தான் மின்வெட்டுக்கு காரணம். இதை சமாளிக்க முதலில் 2000 மெகாவாட்டும், பின்னர் 4500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின் வெட்டும், மின் தடையும் தொடர்வது ஏன்?
மின்வெட்டு அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. அதனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? லிஸ்ட் இங்கே!
தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று காலை மின்விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது.
என்ன பிரச்னை?: தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின்சுவிட்சுகளில், ஒரு சுவிட்ச்-சின் பி-பேஸ் (B-Phase) மின்விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்து, மின்விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.
சீரானது எப்படி?: இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது.
தமிழ்நாடு அரசின் விளக்கத்தின் உட்பொருள்
இதன்மூலம், மின்வெட்டு தொழில்நுட்ப கோளாறால் நடைபெற்றதே ஒழிய, அன்புமணி குற்றஞ்சாட்டியதை போல், மின் தட்டுப்பாடு காரணம் இல்லை என்பதே தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தின் பொருளாகும்.
தனியாரிடம் மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
- இருப்பினும், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் மின் தேவைக்கு இடையே உள்ள வித்தியாசம் காரணமாக மின் தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான்.
- தமிழ்நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
- அதேநேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக 35 ரூபாய் வரை செலுத்தி தமிழ்நாடு அறசு வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இரவு நேரங்களில ஏற்படும் மின் தடையை சரி செய்து தடையற்ற மின்சாரத்தை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய TANGEDCO டெண்டர் கோரியிருந்தது.
- டெண்டரில் 31.99 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 35 ரூபாய்க்கு கொள்முதல் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்சார சேவை தொடர்பாக புகார் அளிக்க...
தொலைபேசி: பிஎஸ்என்எல் இணைப்பில் இருந்து 1912 அல்லது மற்ற இணைப்புகளில் இருந்து 044-1912 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை அழைத்து மின்தடை மற்றும் பிற மின்சார சேவை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.
இணையத்தளம்: TNEB CCMS Portal மூலம் மின்தடை, மின்னழுத்தப் பிரச்சினை, மீட்டர் பழுது மற்றும் கட்டணப் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். 24 மணிநேரமும் செயல்படும் 'WHATSAPP CHATBOT' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
X தளம்: @TANGEDCO_Offcl என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தை குறிப்பிட்டு, புகார் சார்ந்து பதிவிட்டாலும் உரிய விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் படிக்க | இடைத்தேர்தலில் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக? பனையூரில் பரபரப்பு