SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Akvan Cyclone: தமிழகத்தை நெருங்கும் அக்வான் புயல்? எங்கு கரையை கடக்கும்?

Akvan Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகி வரும் 'அக்வான்' புயல் வரும் நவம்பர் 19 அல்லது 20-ஆம் தேதி எண்ணூர் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் நகர்வைப் பொறுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு கனமழை கிடைக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Written By R Balaji
Published: Nov 15, 2026, 09:05 IST | Updated: Nov 15, 2026, 09:11 IST
Join

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே அர்னாப், முரசு என இரண்டு புயல்கள் உருவாகி ஆந்திர மாநிலம் வழியாக கரையை கடந்தன. இதனால் தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. தற்போது வங்கக்கடலில் மூன்றாவது புயல் உருவாவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெற்றுள்ளது.

அக்வான் புயல் எப்போது உருவாகும்?

தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 36 மணி நேரத்தில் அக்வான் புயலாகவும், 48 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாறக்கூடும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை புயல் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்குமா அல்லது மீண்டும் ஆந்திராவை நோக்கி நகருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெவ்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் மாறுபட்ட தகவல்களை வழங்கி வருவதால், புயலின் நகர்வை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரையை கடக்குமா? ஹேமச்சந்தர் கணிப்பு!

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரின் கணிப்பின்படி, அக்வான் புயல் வரும் 19ஆம் தேதி இரவு அல்லது 20ஆம் தேதி அதிகாலையில் எண்ணூர் - கடலூர் இடையே தீவிரப் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு மழையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கனமழையுடன் பலத்த காற்றும் வீசுமா அல்லது சூறாவளிக் காற்றின் தாக்கம் மட்டுமே இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. தற்போதைய கணிப்புகளின்படி, அக்வான் புயல் தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவை வழங்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதற்கிடையே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் அக்வான் புயலின் நகர்வு குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நாளை கிடைக்கவுள்ள புதிய வானிலை தரவுகள் புயலின் பாதை, வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவு மற்றும் கரையை கடக்கக்கூடிய இடம் உள்ளிட்டவற்றை ஓரளவுக்கு தெளிவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புயல் நெல்லூர் அல்லது அதற்கு தெற்குப் பகுதியில் கரையை கடந்தால் வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? ஏஐ மாடல்கள் சொல்வது என்ன?

தற்போது வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கணிப்பு மாதிரிகளும் முக்கியப் பங்கு வகிக்க தொடங்கியுள்ளன. வழக்கமான வானிலை கணிப்பு மாதிரிகளுடன் ஏஐ மாதிரிகளின் கணிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

அக்வான் புயலை பொறுத்தவரை, ஏஐ மாதிரிகள் வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என கணித்துள்ளன. ஆனால், பாரம்பரிய வானிலை கணிப்பு மாதிரிகள் ஆந்திர மாநிலப் பகுதிகளுக்கு அதிக சாதகமான சூழலை காட்டுகின்றன. குறிப்பாக, புயல் நெல்லூர் வரை வந்து கரையை கடந்தால் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக, ஓங்கோல் அல்லது மச்சிலிப்பட்டினம் பகுதிகளை நோக்கி வடக்கு திசையில் நகர்ந்தால் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்கள் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போகக்கூடும்.

புயலின் வலிமையும் அதன் நகர்வில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. வலுவான புயலாக மாறினால் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தால் வட தமிழகத்திற்கு சாதகமான பாதையில் நகரக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, அக்வான் புயல் எங்கு கரையை கடக்கும், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யுமா என்பதற்கான தெளிவான விடை அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் புதிய வானிலைத் தரவுகளைப் பொறுத்தே அமையும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES