100 கி.மீ வேகத்தில் கரையை கடந்த முரசு புயல்.. எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் அலர்ட்
Cyclone Murasu Latest Update: ஆந்திராவில் ஓங்கோல் என்னுமிடத்தில் 110 கிலோமீட்டர் மணி வேகத்தில் முரசு புயல் கடந்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லூர் மற்றும் நாராசபுரம் இடையே ஓங்கோல் என்னும் இடத்தில் முரசு புயல் கரையை கடந்திருக்கிறது. கரையை கடக்கும் பொழுது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
Cyclone Murasu Latest Update: முரசு புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாகவே வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையில், தீவிரமாக புயலாக வலுப்பெற்றுள்ள முரசு புயல், கரையை கடந்தது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்த முரசு புயல்
இந்தியா வானிலை மையம் கூறுகையில், தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த 'முரசு' (Murasu) எனும் தீவிர சூறாவளி புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இது இன்று (நவம்பர் 3, 2026) அதிகாலை 03:30 மணி முதல் 05:30 மணிக்குள் (இந்திய திட்ட நேரம்), நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே, ஒங்கோலுக்கு அருகில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100-110 கி.மீ ஆகவும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் இருந்தது. இன்று காலை 05:30 மணி நிலவரப்படி, இந்த புயல் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில், ஒங்கோலுக்கு அருகில் (அட்சரேகை 15.6° வடக்கு, தீர்க்கரேகை 80.2° கிழக்கு) மையம் கொண்டிருந்தது. இது பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கு-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) மேற்கு-தென்மேற்கே 120 கி.மீ தொலைவிலும், நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கே 130 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்களின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை
வெதர்மேன் கொடுத்த அலர்ட்
முரசு புயல் தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "முரசு புயல், இன்று அதிகாலை வேளையில் ஒங்கோல் அருகே நிலப்பரப்பை அடையத் தொடங்கியது. புயலின் மையப்பகுதி தற்போது கடற்கரையைக் கடந்து கொண்டிருக்கிறது; நிலப்பரப்பை அடையும் இந்த முழு நிகழ்வும் அடுத்த சில மணி நேரங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், ஒங்கோல், அமலாபுரம், மசூலிப்பட்டினம் மற்றும் காகிநாடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்துள்ளது.
முரசு (Murasu) புயலின் வெளிப்புறச் சுழற்சிப் பட்டைகள் (feeder bands) காரணமாக, புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. 'முரசு' புயலின் மையப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் சுழற்சிப் பட்டைகள் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது தீவிரமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
இன்று எங்கெல்லாம் மழை வெளுக்கும்?
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 3ஆம் தேதியான இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 4ஆம் தேதியான நாளை உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, நவம்பர் 5ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நவம்பர் 6ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.