MK Stalin Health Update: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தது. வைரல் காய்ச்சல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக வட்டாரத்தில் சொல்லப்பட்டது. ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று நடைபெற இருந்த முப்பெரும் விழாவை திமுக தலைமை ஒத்திவைத்தது. மேலும், நேற்று அண்ணா பிறந்தநாளுக்கு அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வரவில்லை. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவர் கூறுகையில், எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் நேற்று ஸ்டாலினை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவருடைய நேர்முக உதவியாளர் திரு. தினேஷ் அவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்” என தெரிவித்தார். மேலும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான அவரது பொதுப்பணி இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். அவர் விரைவில் முழுமையாக நலம் பெற்று, புதுப்பொலிவுடனும் புத்துணர்வுடனும் மீண்டும் மக்கள் பணியைத் தொடர்வார்" என்று கூறினார்.